Tuesday 27 December 2016

காட்டுமிராண்டி நாங்க..














வெங்காயம் உரிக்கும்
கெழவி வளத்த
காங்கேயம் காளை
தைரியம் எவனும் இருந்தா
புடிடா வால

அலங்காநல்லூரு மண்ணு
ஆம்பள எல்லாம் வாங்க
ஆலத்தி சுத்த போல
கொம்பால குத்திப்போவான்

தம்பிக்கூட விளையாட
தடை போடுவீங்க
சத்தமா பேசிப்புட்டா
பொடா போடுவீங்க
ஆனா,

காட்டுமிராண்டிங்க நாங்க…

காட்ட எல்லாம் அழிச்சுப்புட்டு
கான்கிரீட்டு சுடுகாட்டுல
நாய் வளர்த்து நலம் பேனும் 
நீங்களெல்லாம் மனுஷங்க தான்

காள மாட்ட அய்யனாரா
கழுவி குழுப்பாட்டி
தம்பி போல விளையாடும்
நாங்களெல்லாம் காட்டுமிராண்டிங்கதான்..



Saturday 17 December 2016

கண்ணம்மா- என் குழந்தை



















கண் அசர்ந்து நான்
உறங்கச் செல்வேன்
கண் வியர்க்க
அருகில் வருவாள்
கதைகள் பல
அவள் சொல்வாள்
கட்டியணைத்து
கண் துடைப்பேன்
குழல் கோதி
உறங்க வைப்பேன்

கண்ணம்மாவை முத்தமிட
சத்தமின்றி நான் செல்வேன்
முகம் நடுவே நுழைத்திடுவாள்
அவளுக்கான முத்தத்தை
இவள் திருடிச் சென்றிடுவாள்

கண்ணம்மாவென நான் அழைக்கும்
இன்னுமொரு பெண்ணென்றால்

கண்ணம்மா- என் குழந்தையென்பேன்….


Monday 5 December 2016

அம்மா



















பிள்ளைப்பருவத்தில் தந்தையில்லை
பிழைக்கும் பருவத்தில் தாயுமில்லை
காதல் பருவத்தில் கணவணில்லை
தாயாகும் பருவத்தில் மட்டும்
தழைத்தோங்க எத்தனை பிள்ளைகள்

இருவரின் அன்பு தான்- ஒரு
பெண்ணை அம்மாவாக உயர்த்தும்
இவள் ஒருத்தியின் அன்பு மட்டும்
இவளை அம்மா என உயர்த்தியது

வீம்பிற்கு பல செய்தாள்
நல் விதைகளும் சில விதைத்தாள்
ஆண்களின் கர்வத்தெல்லாம்
அடக்கிய ஆண்டாள்
அரையடி இடைவெளி
அவள் ஆண்மையின் அடையாளம்

புகழாரம் பாடும் நான்
இன்றும் இவரை
ஒரு தலைவராய் வெறுக்கின்றேன்
எனினும்
மரணத்தை நீ தழுவையிலே
மரணம் கூட உனக்கு
எளிதாக இல்லையே எனும்
வருத்தத்தில் வாடுகிறேன்

சக மனிதனாக…

Wednesday 30 November 2016

பதுக்கி வச்ச பணம்














நீ பருவமடைவதை எதிர்பார்த்து
பதுக்கி வச்ச பணமெல்லாம்
கணக்குல காட்டப்படாத
கருப்பு பணமில்ல எம்மகளே
குடிகார தந்தையிவன்
குடிச்சே தீர்த்திடாம
காப்பாத்தி வச்ச பணம்

தான் காச காப்பாத்த
துண்டு போட்டு நிற்கின்றோம்
சிறுக சிறுக சேர்த்த காசு
சத்தமில்லாம செல்லாதுன்னா
செத்துப்போன பணத்த
சேர்த்துவச்சதன் பயனென்ன?

கருப்பு பணம் ஒழிஞ்சிட்டுன்னு
கத்துற பயலுவெல்லாம்
ட்விட்டரு அக்கவுண்டு
ரெண்டு மூணு வச்சிருக்காய்ங்க
கியு கட்டி நிக்கும் நாங்க
ஒத்த வங்கி அக்கவுண்டுமில்ல

என்னத்தையா ஒழிச்சுப்புட்டீக?
ஒழிச்சதெல்லாம் ஒன்னே ஒன்னு

எம்ம சணம் நிம்மதியத்தான்..


Thursday 10 November 2016

கண்ணுப்படபோகுதையா…

இளையராஜாவின் ஓவியம்



















பின்னமர்ந்து பயணிக்கும் தாயவளின்
மடியிலமர்ந்து விரல் சுப்பிக்கொண்டு
பயணிக்கின்றேன் தந்தையவனின்
ஈருருளியில்

வானத்தில் பார்த்தேன்
நிலவென்னை பின் தொடர்கிறது
வீதியைப் பார்த்தேன்
பதுமை ஒருத்தி முத்தம் கொஞ்சினாள்
விந்தையாய் நான் திரும்ப
அண்ணன் ஒருவன் கண் சிமிட்டினான்

வீட்டிற்கு வந்தவுடன்,
உப்பை கையில் அடக்கி
என் முகத்தைச் சுற்றி
கால் கைகளை உரசி
தூவென்று துப்பச்சொல்லி
ஊருக்கண்ணெல்லாம் உதறித் தள்ளிவிட்டாள்


கண்ணுப்படபோகுதையா என்று


Saturday 5 November 2016

சாயி! சாயி!



























பிச்சையெடுத்து உண்ட மகான்
பளிங்கு சிலையில்
பள பள உடையில்
வைரத்தில் கிரீடமென
பணக்காரக் கடவுளானார்

வியாழக்கிழமையென்றால்
வழியெல்லாம் மகிழுந்து
 ஹாரன் சத்தத்தில்
ஆக்ஸிஜன் இல்லா நெருக்கடியில்
அவர் பாதம் நோக்கி ஒடுகின்றனர்
அத்தனை மக்களும்

அவர் போல மனிதனாய் வாழ்ந்துவிட்டு
போனாலே பூவுலகம் எங்கும்
புன்னகை மலரும்

மகான்களுக்கு மார்க்கெட்டிங் எதற்கு ?
மனதில் அவரை நிலைக்கச்செய்தால்
அதைவிட இறைபக்தி
எதுவும் இல்லையே…

சாயி! சாயி!

Monday 24 October 2016

கண்ணம்மாவின் காதல்



















கயல்விழி கதைச் சொல்ல
முயல் பற்கள் மொழி பேச
கனியமுதிதழால் உன்னை
களவாடிச் சென்றிடுவேன்

பிறைநிலவு புன்னகையும்
பின்னிய குழலழகும்
பின் நின்று நீ அணைக்க
என் காதணியும் வெட்கமுறும்

கருநிறத்து முரடன் உந்தன்
நிறம் பூசாது நான் இருந்தால்
நாணத்தில் என் கண்கள்
நயமாக தெரியாது

உத்தம பொய்கள் பல உண்மையறிந்தும்
கேட்டிடுவேன்
உன் விருப்பு வெறுப்பனைத்தறிந்தும்
சீண்டிடுவேன்
செல்ல ஊடல்களுக்கு அடிக்கல்
நாட்டிடுவேன்
கண்ணம்மா என நீ அழைத்தால்
குழந்தையாக 
மாறிடுவேன்





Friday 14 October 2016

நான் ஏன் பிறந்தேன் ?


















வயிற்றுக்குள் பிரண்டவனை
மார்ச்சூட்டில் புதைத்துக்கொள்ள
அவள் மனமும் ஏங்க

உடல் முழுதும் நோக
தலைகீழாய் பிரசவித்தாள்
தனயன் எனையை

வெளிச்சம் என் விழி கூச
விந்தை மனிதரைக் கண்டு
விழியால் வினவினேன்
நான் ஏன் பிறந்தேனென்று

மீசை மயிர் குத்த
வன்முறை முத்தமிட்டு
உச்சிமுகர்த்தான் தகப்பன்

நெகிழ்ச்சியில் அனைவரும்
பூரிப்பில் பெற்றவளும்
பெருமையில் பெற்றவனும்

இத்தனை அன்பு நிறைந்த
இன்பத்தை மொத்தமாய்
அவர்களுக்களித்தது
என்னுடைய பிறப்பு

நான் ஏன் பிறந்தேனென்ற வினாவிற்கு
அவனின் முத்தமும்
அவளது மார்ச்சூடும்
அவர்களது அன்பும்
பதிலாய் அமைந்தனவே..




Monday 19 September 2016

கண்ணம்மா - என் காதலி
















எண்ணங்கள் எழுத்தின் வழி
கண்ணம்மா
ஏதும் நான் உரைத்ததில்லை

உள்ளத்தின் உணர்ச்சியெல்லாம்
கண்ணம்மா
உன் கண்களினுள் புதைத்துவிட்டேன்

ஆசைகள் தோன்றுதடி
கண்ணம்மா
அதிகாலை குழல் முடிகையில்

காதலின் வாய்மொழி
கண்ணம்மா
நின்றன் கண்களில் கண்டுகொண்டேன்

யாதொரு இன்பமும்
கண்ணம்மா
என் யாக்கை விரும்புதில்லை

எத்தனை கொடுமைகளடி
கண்ணம்மா
எனை விட்டு சென்றிலன் நீ





Saturday 18 June 2016

மனையாள்















உன்னுடைய ஆசையெல்லாம்
தனதாய் மாற்றிக்கொண்டு
மனதை ஒப்படைத்து
மஞ்சம் சேர்பவளை 
மதியாது வாழாதே
மதிகெட்டு போகாதே

அழைத்து வந்தவளை அலட்சியபடுத்தி
அவள் அழகை அழுகையில் கரைக்காதே
மண்டியிட்டு மன்னிப்பு கேள்
ஆண்மையெனும் ஆணவ கோமணத்தை
அவிழ்த்து அம்மண ஆண்மகனாய்
மனையாளைச் சேர். 




Thursday 2 June 2016

*இசைஞானி*















செல்வத்தில் சிறப்பாம் செவியென
சொன்னான் எம் மறையின் ஆசான்
வள்ளுவப் பெருந்தகை
அச்செவியினையே மகிழ்வுறச் செய்யும்
செந்தமிழிசையோ சிறு மானிடன் உருவில்
இம்மண்ணிற்கு வருகை

பிரச்சினைகள் பல இருப்பினும்
படுக்கை செல்கையில்
இவன் இசை அருகிருந்தால்
இன்பமாய் இதயமும் நிறைந்திடும்

மனையாளின் கோவம் தீர்க்க
மந்திரங்கள் தேவையில்லை
*மண்ணில் இந்த காதல் அன்றி* என
மண்டியிட்டு அவள் கைபிடித்தால்
மஞ்சம் சேர்ந்திடலாம், மன்னிப்பும் வழங்கப்படும்

சீரிய தைரியமும்
சித்தமும் இசையென வாழும்
சித்தன் நீயே!
அழியா இசையை பாமரனுக்கும்
அளித்தருளும் அண்ணலே-உனது

அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்…

Friday 1 April 2016

முட்டாள்கள் தினம்...

இயற்கை இன்னிசை இசைக்க
இளங்காற்றோ இந்நேரம் இதமாய் வீச
ஏதோ என் மனம் என்னவள் வருகையை
எதிர்பார்த்து ஏங்க

விழிகள் படபடக்க பின்னே திரும்பினால்
விழிமுன் வந்தது
வாழ்க்கையின் பயனே
வடிவாய் இப்பெண்வழி

ஈரிமை நடுவே ஒரு சொட்டு
உதிரம் போல சிறிதாய் செந்திலகம்
கவப்பையின் அழகை அம்முகம் சுமந்திட
என்ன தான் தவம் செய்தனவோ?

இப்பெண்மையிடும்
கண்மையிலே
உண்மையிலே தோற்றுப்போகும்
ஆண்மையின் கர்வம்

கர்வமிழந்து உன் கால்தடங்கள்
பின் தொடர புறப்பட்ட தினமன்றோ
இத்தினம்..
தற்செயலோ என்னவென்றால் இத்தினம் தான்

முட்டாள்கள் தினமும்…!!!  

Tuesday 15 March 2016

தோற்றே போகிறான்..












எம் மொழி பேசும்
எந்தமிழன் மாண்டிட தோள் கொடுத்து
துணையிருந்தாய்,

எம் மீனவ உடன்பிறப்புகளை
பிற நாட்டவன் கொன்றொழிக்கையிலும்
அமைதிக் கொண்டாய்,

எம் நாவில் எமக்கு
விருப்பமில்லா வேற்று மொழியை
திணிக்க முற்பட்டாய்,

உன் முயற்சிகள்
வீண்போக எம் மண்ணையே
புறம் தள்ளினாய்,

எம் மண்ணின் வளங்கள் அழிந்திட
எம் இனத்தின் துரோகிகளோடு கைகோர்த்து
எண்ணற்ற திட்டம் அமைத்தாய்,

இவையெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தால்
இறையாண்மைக்கு எதிரானவன் என
சிறை தள்ளி புறமுதுகில் மிதித்தாய்,

இதன் பிறகும் எங்கேனும்,
இந்நாட்டின் கீதத்தை கேட்கையிலே
மயிர் கூச்செழுந்திட
உடல் தானாய் நிற்க
உணர்வுகள் மாற்றம் கொள்ள
உதடுகள் வங்காள மொழிக்கு
வாயசைக்க

ஒரு நிமிடம்,
இத்தமிழன் தோற்றே போகிறான்
இந்தியனிடம்…


Saturday 13 February 2016

எதற்கடா பிப்ரவரி 14 ??














நின் விழி பார்த்த ஞாபகமும்
நின் குரல் இசைத்த ஒசையும்
நின் நிழல் தேடும் என் நிழலும்
நிதம் என் நினைவினில் நிற்குதடி..

இசையாக நம் நினைவு
திசையெங்கும் உலவும்பொழுது
கசையடி கூட தாங்கினும்
எவ்விசைக்கும் அசையாதடி நம் காதல்..

இரவும் பகலும் இருவிழியணைத்தே
இருவரும் வாழ்வோம்
இவர்கட்கு எதற்கு இதற்கென்று
ஒரு தினம்??

விழியினுள் தெரியாத காதலையா
எம் மொழி கூறிவிடும்?
எம் இதழ் சொல்லா காதலையா
சோக்லேட் சொல்லிவிடும்?
கட்டியணைத்தல் சொல்லா காதலையா
கரடி பொம்மை சொல்லிவிடும்?

வெளிநாட்டு மோகத்தை காதலிலும் தினித்து
தூய உணர்வுக்கும் கலப்படம் சேர்க்கும்
விண்ணைத்தாண்டி வரும்
விற்பன்னர்கள் வாழும் காலமிது

தினம் தினம் காதல் பேசி
திரளணைத்து திரவியம் தேடும்
தினம் அனைத்தும் காதலர் தினமே

எனவே, எதற்கடா பிப்ரவரி 14 ??



Sunday 7 February 2016

”விசாரணை- முகவரியற்ற,குரலற்ற அப்பாவிச் சமூகத்தின் மீதான பார்வை”




















வணக்கம் நண்பர்களே!
முதல் வரியைக் கூட என்னை பதிவிட விடாமல், என் சிறு இதயத்தையும் அதையும் விட சிறிய மூளையையும் பாதித்த ஒரு சினிமாவை பற்றிய ஒரு கட்டுரையே இப்பதிவாகும்.
என்னுடைய பதிவுகளில், இதுவே  சினிமாவை பற்றிய முதல் கருத்துப்பதிவாகும்.

*விசாரணை*, வெற்றிமாறனின் மூன்றாவது திரைப்படம்.  ஐயா திரு. சந்திரகுமார் எழுதிய அவர்களது சிறைவாழ்க்கையை பற்றிய “LOCKUP” என்கிற நாவலை தழுவியே இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்கள் என்று பட்டியலிட்டால் எந்தவொரு பட்டியலிலும் கண்டிப்பாக *விசாரணை* புறம் தள்ளப் படாது என்பது எனது ஆழமான நம்பிக்கை. அத்தனை மெனக்கெடல்கள் ஒரு படைப்பாளியாக வெற்றிமாறன் கண்டிருப்பதின் கூறுகள் படம் முழுக்க தெரிகிறது.
அப்பாவி இளைஞராக தினேஷ் மற்றும் மூவரது நடிப்பும் அபாரம். ஆனால் இவையனைத்தையும் விவரிக்க மற்றும் விமர்சனம் செய்ய பல்வேறு விமர்சகர்கள் உள்ளனர். இதை நான் செய்ய விரும்பவில்லை.

நான் இதைப்பற்றி பதிவிட விரும்புவது இத்திரைப்படம் என் மனதில் ஆழப்பதியச் செய்த சில கருத்து விதைகளை பற்றி தான்.

முதலில்,
பிற மாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் முகவரியில்லா இளைஞர்கள் மீது காவல் துறையினரது பார்வையை பதிவு செய்திருக்கிறார்.                 மிகவும் கொடுமை என்னவென்றால் பிறர் செய்த தவறுக்கு தான் தண்டனை அனுபவிப்பதே ஆகும்.  உண்மை குற்றவாளி கிடைத்தாலும் அவன் செல்வாக்கு படைத்தவனாய் இருந்தால் யாரோ ஒரு அப்பாவியைக் கொண்டு அவனை சிறைப்பிடித்து.. செய்யாத்தவறை ஒப்புக்கொள்ளச் செய்து  அவனை சிறைவாசம் அனுப்பும் வழக்கம் நாம் அனைவருக்கும் தெரிந்ததவாகவே இருந்தாலும். அந்த அப்பாவியின் கண்ணீரையும், அவனது வலிகளையும், அவனை காவல்துறையினர் ஒப்புக்கொள்ள கையாளும் கொடூர மனிதத்தன்மையற்ற வன்கொடுமை முறைகளையும் துள்ளியமாக படமாக்கி நம் மனதை பதைபதைக்க செய்திட்டார் வெற்றிமாறன்.

ஒரு காட்சியில்,
அப்சல் எனும் அப்பாவி இளைஞன் படம் பார்த்துவிட்டு அவன் தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருப்பான். அப்பொழுது ஒரு ஆந்திர காவல்காரர் அப்சலை அழைத்து,
உன் பெயரென்ன? என்பார்.
அப்சல், என்று அந்த இளைஞன் பதிலளிக்க
காவல் காரனதுஅடுத்த கேள்வி..
அல் கொய்தா வா? ஐ.எஸ்.ஐ.எஸ் ஆ?
இளைஞன் பதறியபடி அதெல்லாம் இல்ல சார். தமிழ்நாட்டுலர்ந்து வேல பார்க்க வந்திருக்கேன் சர்.
காவல் காரனது அடுத்த கேள்வி..
தமிழ் ஆ? ஒ L.T.T.E ஆ ?

இந்த காட்சி சில நிமிடங்களாகவே இருந்தாலும் இதனது தாக்கம் என்னை பல முனைகளில் சிந்திக்க செய்த்தது. இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாத அமைப்புகளோடு ஒப்பிடும் தன்மையும்.. தமிழன் மீது பிற மாநிலங்களில் அவர்களது பார்வையையும், போராளியை தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் எழுத வேண்டுமென்றால் இன்னொரு கட்டுரை தான் எழுதவேணும்.

நாட்டின் சுதந்திரத்துக்கே வன்முறையை ஒரு வழியாய் நம்பாத இந்திய திருநாட்டில் , மக்கள் பாதுகாப்பிற்கெனவும்..சட்டம் ஒழுங்கின் சீரான இயக்கத்துக்கும் துணை புரியவேண்டிய காவல்துறையின் அமைப்பில் எவ்வளவு ஆழமாக வன்முறை உள்ளது என்பதையும், அதிகாரத்தின் ஆதிக்கத்தையும் , அப்பாவி மனிதர்கள் மீதான உரிமை மீறலையும் இரண்டு மணிநேரத்தில் இத்திரைப்படத்தை விட எதுவும் இவ்வளவு துள்ளியமாய் காட்டியிருக்க முடியாது.

கடைசியாக,
ஆயிரம் குற்றவாளி சட்டத்தின் பிடியிலுருந்து தப்பிக்கலாம் , ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதை சிறு பிள்ளை முதலே கேட்டு வளரும் நாம் அனைவரும் . குற்றவாளியை தப்பிக்கச் செய்வதை கடைபிடிக்கும் நாம், நிரபராதியையே தொடர்ந்து தண்டிப்பதையும் கடைபிடித்துதான் கொண்டிருக்கிறோம். இந்த மாற்றம் மிகவும் அவசியம் ஒரு சமூகம் முன்னேறுவதற்கு.
இதுபோன்ற சினிமாக்கள் வரவேற்கத்தக்கவை. கொண்டாடத்தக்கவை. வழக்கு எண் 18/9 மறந்தோம். இதையும் காலப்போக்கில் மறந்துவிடக்கூடாதென்பது எனது ஆசையாகும்.                                           

நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். இதுபோன்ற சினிமாக்களை நாங்களும் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று மார் தட்டிக்கொள்ளலாம். இது போல சமூக அக்கறை கொண்ட சினிமாக்கள் இச்சமுதாயத்தில் கொண்டாடப்பட்டால் நாம் பெரிய சமூக மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பெருமையும், கர்வமும் கொள்ளலாம்.

திரு.வெற்றிமாறன்,திரு.தனுஷ், திரு.தினேஷ், ஐயா திரு. சந்திரகுமார் , திரு.சமுத்திரக்கனி மற்றும் அத்திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் இதுபோன்ற சமூக அக்கறைக்கொண்ட ஒரு படத்தை படைத்தமைக்கு சிரம் தாழ்த்திய நன்றிகளும் வாழ்த்துக்களும்.


ஒரு வரியில்,                                                                                                      

விசாரணை- முகவரியற்ற, குரலற்ற அப்பாவிச் சமூகத்தின் மீதான பார்வை.





Saturday 30 January 2016

பாண்டே, கேள்விக்கென்ன பதில்..??














வணக்கம் நண்பர்களே,
என்னுடைய இன்றைய கருத்துப் பதிவு தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை நடத்தக்கூடிய திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களை குறித்ததாகும்.

முன்னர்,
இவரது தொடக்க கால நிகழ்ச்சிகளை கண்ட பொழுது இவரது கேள்விக்கனைகளை கண்டு பெரிதும் வியந்து,
“அடடா!! *முதல்வன்* அர்ஜுன் போல ஒருவன் வந்துவிட்டானப்பா, இனி அரசியல்வாதிகளின் நாக்கை பிடுங்கி, உண்மை முகத்திரை கிழிக்க போகிறான் என்று கனவெல்லாம் காண ஆரம்பித்தேன் ஒரு சாமானியனாக.
அவரது மின்னல் வேக கேள்விகளும்… வந்திருக்கும் விருந்தினரை மடக்கும் தந்திரமும் மிகவும் பிடித்துப் போக அவரது இரசிகனாகவே மாறிப்போனேன்.

ஆனால் இன்றளவில்,
இவரது நேர்காணல்களை காணும்பொழுது எமக்கு புரிதலுக்கு வரக்கூடிய  விடயங்கள் என்னவென்றால் தான் சிறப்பான, தைரியமான , மிகவும் சாமர்த்தியமான ஒரு நிருபர் என்று தன்னை பிரகடனபடுத்திக்கொள்ளும் நோக்கத்தில் அவர் வரும் விருந்தினர்களிடையே கேள்விக்கான பதில் முழுதாய் சொல்லி முடிப்பதற்குள் நடு நடுவே மடக்குகிறேன் என்ற நோக்கத்தில் விருந்தினரது பதிலை திசைத்திருப்பி பதில் சொல்ல வந்தவரையும் முட்டாளாக்கி, நேர்க்காணல் கானும் மக்களையும் முட்டாளாக்கி தான் மட்டும் சாமர்த்தியசாலி எனும் பெருமையடைவதில் என்ன ஆனந்தம் திரு.பாண்டே அவர்கட்கு என எனக்கு சிறிதும் விளங்கவில்லை..

ஒருவன் பதில் சொல்ல முனையும்பொழுது குறுக்கிடாமல் இருத்தலே ஒரு ஒழுக்கமான நேர்காணலாகும். எனக்கு பெரிதும் சந்தேகம் என்னவென்றால் இவரது வேலை கேள்வி கேட்டு விருந்தினரிடமிருந்து பதில் வரவைப்பதா? அல்லது விருந்தினரை மடக்கி, தடுமாறச்செய்து அவனை தன் நிலை குலையசெய்வதா?


மற்றொரு விடயமென்னவென்றால்,
திரு.பாண்டே அவர்கள் தன்னுடைய சாமர்த்தியத்தையும், ஆதிக்கத்தையும் திரு. கி.வீரமணியுடனும், திரு.நாஞ்சில் சம்பத்துடனும், திரு. பழ.கருப்பையாவுடனும் காட்டியது போல திரு.இராமகோபாலனிடமோ மற்றும் பிற பா.ஜ.க பிரதிநிகளுடனான நேர்காணல்களில் காட்டவில்லையே ஏனென்ற கேள்வி பார்வையாளர்களான நமக்கு உதிக்கிறது..

ஆனால்,
இவரது கேள்விகளெல்லாம் மக்களாகிய நமது மனதில் உள்ளது போல் இருந்தாலும்… இவரது நேர்காணல் முறையென்பது அக்கேள்விக்கான பதில் கிடைப்பதை தவிர்த்து, விருந்தினரை திசை திருப்பி பதிலைப் பிசக செய்வதாக மாறிப்போகும் காரணத்தால் மக்களாகிய நாம் விரும்பிய கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கான விடையை அறிந்து கொள்ளாமல் போவதற்கு ஆளாகின்றோம். இதுபோன்ற இவரது செயல்பாடுகள் இனியும் தொடருமேயானால், இந்நிகழ்ச்சியும் அரசியல் சாயம் பூசப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவும், *T.R.P* க்காக நடத்தப்படும் ஒரு சமூக அக்கறையற்ற ஒரு ”ரியாலிட்டி ஷோ” போலவே மக்களைச் சென்று சேரும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

எனவே,
பாண்டே தனது ஆதிக்கத்தை குறைத்துக்கொண்டு விருந்தினரிடமிருந்து அவர் கூற வரும் பதிலை கூறும் வரை பொறுமைக காக்க வேண்டுகிறோம். தனது சாமர்த்தியத்தை சற்றே புறம் தள்ளி விட்டு, சமூக நோக்கத்தை முன் நிறுத்தி செயல்பட்டால் எட்டா உயரத்தையும் எட்டும் வல்லமை படைத்தவராக பாண்டேவை நாம் வரும் காலங்களில் காணலாம்.

நன்றி!!


ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...