Sunday 26 March 2017

கடுகு - குற்றவுணர்வு.



















வணக்கம் தோழர்களே,

            விசாரணை என்ற திரைப்படத்திற்கு பின்னர் என் உறக்கத்தை கெடுத்த, சிந்திக்கச் செய்த ஒரு திரைப்படம்… விஜய் மில்டனின் *கடுகு*
எனவே, இந்த திரைப்படத்தின் கலை அம்சம், தொழில்நுட்பம், திரையாக்கம் என பேசுவதற்கு பல சினிமா வல்லுனர்கள் இங்கு வலம் வருகின்றனர். நான் ஒரு சராசரி மனிதனாக இந்த திரைப்படத்தை அணுக விரும்புகிறேன்.

ஆரம்பம் தொடங்கி இத்திரைப்படம் ஒரு மனிதனின் வாழ்க்கைப் போலவே நகர்ந்தது.. சராசரி மனிதனுக்கு என்னென்ன இன்னல்கள் இந்த உலகம் ஏற்படுத்தும் என்பதை இவ்வளவு அழகாக எவரும் விளக்கிவிட முடியாது என்றே தோன்றுகிறது..

*ஒரு கலை அழிகின்றதென்று தெரியும்பொழுதே, அந்த கலைஞனும் இறந்துவிடவேண்டும்*

*Blue film-ல நடிக்க கையெழுத்து போடுற பொண்ண Sunny வாழ்கனு சொல்லுவோம்,
வயித்து பொழப்புக்கு என்ன செய்யுறதுன்னே தெரியாம உடம்ப வித்தா தெவிடியாளுனு ஏசுவோம்*

*தப்பு செய்யறவங்கள விட தப்பு செய்யும்போது அத பார்த்துட்டு பேசாம போற உன்ன மாறி நல்லவங்கதான் ரொம்ப மோசமானவங்க

இது போன்ற வசனங்களெல்லாம் உலுக்கிவிடுகிறது..

புலியாட்டம் எனும் கலை… நிச்சயமாக என் மகன் பிறக்கும் காலத்தில் இருக்காது… அதை புத்தகத்தில் கூட வைத்திருக்கமாட்டோம்…
காரணம் கலைகளிலும் நாம் சாதிய ஆதிக்கங்களை செலுத்தி… கலைகளிலும் ஒரு வர்ணாசிரம ஏற்றத்தாழ்வினை உருவாக்கியுள்ளோம்..

நடனமென்றால் பரதம்…பாடலென்றால் கர்நாடக சங்கீதம் என்று.. அதிலும் வேற்றுமை..

என் மகனுக்கு நான் வயலின் இசையை இரசிக்க சொல்லிக்கொடுப்பேன்.. ஆனால் பறையிசையை பயிலவைக்க முயற்சியெடுப்பேன்… காரணம், , இந்த உலகில் ஏதேனும் புரட்சி உண்டாகவேண்டுமென்றால்.. கலையெனும் ஒரே ஒரு வழி தான் உண்டு… அந்த கலையின் வழி சாதியத்தை வென்றெடுப்போம்..

இதுபோல தான் புலியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கிராமிய இசை, சாமியாட்டம், ஒப்பாரி என எத்தனை கலைகள் அழியும் நிலையில் உள்ளது…

இத்தகைய தருணத்தில் அந்த புலியாட்டத்தின் சில நுணுக்கங்களை அத்துனை அழகாக எடுத்துரைத்து.. புலியாட்டம் ஆடுபவனின் பலம்… புலி போல் வேடம் மட்டும் பூணுவதில்லை, அவன் அந்த வேடம் பூண்டவுடன், அவனுள் ஊறிய அந்த புலியின் குணாதிசயங்கள் அவனை எத்துனை பலம் கொண்டவனாக மாற்றி எதிரியை வீழ்த்துகிறது என மிகவும் வீரியமாக எடுத்துக்காட்டிய விதம்.. சொல்லிக்கொண்டே போகலாம்…

மொத்தத்தில் இந்த திரைப்படம், இந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தோலுரித்திருக்கிறது..

என்னை ஏன் இந்த சினிமா உறங்கவிடவில்லை என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்வுகள் தான் காரணம்,

முதல் நிகழ்வு

பேருந்தில் பயணிக்கிறேன்..
பெண்ணொருத்தி நிற்கிறாள்..
பேடி ஒருவன் அவள் பின் உரசுகிறான்..
அவள் ஒதுங்குகிறாள்…
மீண்டும் உரசுகிறான்…
அவனை கேள்வி கேட்கவில்லை… மனதுக்குள் நான் அவனை திட்டித்தீர்க்கிறேன்…
ஆவடிக்கு டிக்கெட் எடுத்தவள், வாவின் ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிவிட்டாள்..
நான் ஏதும் செய்யவில்லை… மனதில் திட்டிக்கொண்டதோடு சரி…
ஒருவேளை நான் அன்று எழுந்து அந்த பெண்ணிற்கு என் இருக்கையை வழங்கியிருந்தால்… அவள் அந்த தொல்லையிலிருந்தும் தப்பியிருப்பாள், ஒரு பாதுகாப்பான சூழலையும் உணர்ந்திருப்பாள்.. ஆனால் நான் அதை செய்யவில்லை…
அன்று இரவு அவள் எப்படி உறங்கியிருப்பாள்??
ஒருவேளை நாளை அவள் அண்ணன், அப்பா என்று அவர்களின் தொடுதலைக்கூட ஒரு பாதுகாப்பற்ற தொடுதல் போல அவள் உணர நேர்ந்திருந்தால்??
நிச்சயம்.. அந்த நிகழ்வின் போது உரசிய அந்த ஆண் மட்டும் கெட்டவன் அல்ல, அவன் அந்த அவச்செயல் செய்தபோது… அப்பொழுது ஏதும் செய்யாமல் அந்த பெண்ணிற்கு நடந்த அநியாயத்திற்கு துணை சென்ற நானும் அவனை விட மோசமான ஒரு உயிரினம் ஆகிப்போனேன்..


இரண்டாவது நிகழ்வு…

ஒரு நாள் என் நெருங்கிய தோழி.. அவள் தந்தை வெளிநாட்டில் இருந்து ஒரு Branded Jeans வாங்கி அனுப்பி வைத்திருந்திருக்கிறார்… இவள் அதிகம் jeans அணியாதவள்… அன்று ஏதோ மிகுந்த ஆசையுடன் எந்த Jeans-ஐ அணிந்துக்கொண்டு ஒரு வேலையாக சென்றிருக்கிறாள்…

தெருவின் ஓரம் நடந்து சென்றிருக்கிறாள்… இரண்டு ஆண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக பின்னே வந்து அவள் பின்னே தட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்… அது மட்டுமின்றி.. அவளை சில வசைச்சொற்கள் சொல்லி நகைத்துவிட்டு சென்றனர்..


அங்கேயே அழுது சில நிமிடங்கள் நின்றிருக்கிறாள் என் தோழி..
ஒரு பத்து நொடிகள் அவளைப் பார்த்த அந்த பொதுஜனம், அடுத்த வினாடி அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனராம்… ஒருவரும் அவள் அருகில் வரவில்லை… அவள் செல்ல வேண்டிய காரணத்தை தவிர்த்துவிட்டு அழுதுக்கொண்டே வீடு திரும்பியவள்… யாரிடமும் இரண்டு நாட்கள் பேசவில்லை…

எனக்கு சில நாட்களுக்கு பிறகு தொலைப்பேசியில் அழைத்தாள்… அவள் பேச்சில் ஏதோ ஒரு வித்தியாசம் தென்பட்டதால்… நான் கொடைய.. அவளும் இவையனைத்தையும் அழுதுக்கொண்டே கொட்டித் தீர்த்தாள்..

ஆறுதல் கூரிய நான்… கடைசியாக அறிவுரை என்ற பேரில்.. ஒரு அசிங்கமும் செய்தேன்… இனி இந்த Jeans அணியாதே என்று அறிவுரை கூறினேன்..
அத்தனை நேரம் அழுத அவள்…
சத்தமாக சிரித்தாள்.. சிரித்துவிட்டு… எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான்’ல என்றாள்..

பதில் அறியாது கூணிக்குறுகினேன்…
அன்று எனக்கு முதிர்ச்சியில்லை…பக்குவமில்லை… புரிதல் இல்லை…
இந்த திரைப்படத்தின் தாக்கத்திலிருந்து நான் இன்னும் மீளவுமில்லை…

இனி நான் என் கண்முன் நடக்கும் அநியாயத்திற்கு ஒரு துளி எதிர்வினையாகவாவது அமைந்திடுவேன் என்னும் உறுதியை இந்த சினிமா எனக்கும் ஏற்படுத்தியுள்ளது..

விமர்சிக்கவெல்லாம் எனக்குத்தெரியாது..

எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியதற்கு விஜய் மில்டனுக்கு நன்றி..


கடுகு- குற்றவுணர்வு.



Saturday 18 March 2017

சமத்துவம் பிறந்திட வேண்டும்..

வணக்கம் தோழர்களே,

            இன்று நான் எழுதக்கூடிய இந்த பதிவு.. நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்த பதிவு..
இன்று எழுதியே தீர வேண்டும் என்று முடிவுக்கு வந்ததன் காரணம்…. மூன்று பதிவுகள், அதைப் பற்றி பின்னே குறிப்பிடுகின்றேன் விளக்கமாக…

முதலில் எனக்கு இந்த Caste reservation மீது ஒரு  Positive approach உண்டான காரணத்தை விளக்குகிறேன்..

நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தபோது.. என் நண்பன்.. அவனும் என் பூர்வீகம் கொண்டவனே… என் சாதி வகுப்பைச் சேர்ந்தவனும் ஆவான்… அவன் அன்று என்னிடம் நான் கேள்வியே படாத ஒரு Information-ஐ சொன்னான்…

ஏதோ பேசிக்கொண்டிருந்தோம்… அப்பொழுது அவன் நல்ல Engineering college-ல சீட் கிடைக்கனும்னா நம்ம’லாம் 95-100% வாங்கனும்டா… எனக்கு இதயம் தூக்கி வாரிப்போட்டது… என்னடா சொல்ற? ஏண்டா?
Engineering Counselling, Medical counsellingனு வேலை வரைக்கும் எல்லாத்துலையுமே Caste based Reservation இருக்குடா… அந்தந்த சாதி அடிப்படைல அவங்களுக்கு ஒதுக்கீடு செய்வாங்க…
நம்ம OC
அதுக்கப்புறம் BC
அதுக்கப்புறம் MBC
கடைசியா SC/ST என்று எனக்கு சாதியை அறிமுகப்படுத்தினான்…எனக்கு அவன் 95% வாங்கவேண்டும் என்று சொன்னது மரண பீதியை கிழப்பியது…
டேய் மச்சான்… 95 லாம் எவ்வளோ முக்குனாலும் வாங்க முடியாதுடா.. அப்ப டுபாக்கூர் College தான் கிடைக்குமா…

அப்பொழுது அவன் இருந்த ஒரு குறுக்கு வழியையும் எனக்கு அறிமுகப்படுத்தினான்.. அது என்னவென்றால்.. சாதிச்சான்றிதழில் தன் சாதியை மாற்றி Forgery செய்வது…எப்படி ஒரு OC easy-ஆக BC,SC ஆவது என்று விளக்கினான்… அவன் அவனது சாதிச்சான்றிதழில் சுலபமாக மாற்றியது பற்றியும் விளக்கினான்… என் தலைக்கு மேல் என்னையே அறியாமல் இரண்டு கொம்புகள் முளைத்ததை உணர்ந்தேன்…

நேராக தந்தையிடம் வந்தேன்…எனக்கு சாதிச்சான்றிதழை மாற்ற வழி பாருங்கள்.. என் நண்பன் நம்மாளு தான்…அவன் மாத்திட்டானாம்… இல்லனா Opportunities கம்மியாம்… எனக்கு மாத்திடுங்க..

அப்பா சிரித்துவிட்டு… இதைத்தான் உன் பள்ளி கற்றுக் கொடுக்கிறதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.. அவர் முகத்தில் கோபம் தென்பட ஆரம்பித்தது… எனக்கு கை கால்கள் உதறல் எடுத்தது…

இதன் பற்றிய அறிமுகப்படுத்தாதது என் தவறா? இல்லை பள்ளிக்கூடத்தின் தவறா? என புலம்பிக்கொண்டே ஆரம்பித்தார்..

கார்த்தி.. நம்ம சமூகம்..நம்ம சாதியைச்சேர்ந்தவர்கள் OC-GENERAL பிரிவுக்குள்ள வர்றோம்… இந்த பிரிவுல நிறைய சாதிகள் இருக்கு… இதையெல்லாம் உயர்ந்த சாதியாக கருதப்படுகிறது...
நீ படிக்கிறியா? ஆமா என்றேன்..
நான் படிச்சிருக்கிறனா? ஆமா என்றேன்..
ஐயா படிச்சிருக்காங்களா? ஆமா என்றேன்..
பாட்டையா? தெரியலையே…

பாட்டையாவும் படிச்சவர் தான்… வெளிநாட்டு வணிகத்துல எல்லாம் ஈடுப்பட்டிருக்கிறோம்… இவையெல்லாமே இந்த சாதியின் அடிப்படையில நம்ம பிறப்பு ஏற்பட்டதனாலதானே சுலபமா கிடைச்சுது…
சரி… ஆனா… எப்படி இந்த உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி எல்லம் உருவாச்சு…எப்படி இது உயர்ந்த சாதி இது தாழ்ந்த சாதினு பிரிச்சாங்க.. எனக்கு புரியல.. நம்ம என்ன செஞ்சோம் உயர்சாதில வர்றதுக்கு?

மனு அப்படின்னு ஒரு புறம்போக்கு இருந்தான்… அவன் ஒரு நீதி எழுதி வச்சுட்டு போயிட்டான்… அத புடிச்சிகிட்டு தொங்கி தான் இந்த பிரிவு ஏற்பட்டது…

அது என்ன நீதி…

அதை விளக்கும் அளவு எனக்கு தெரியாது.. ஆனால் நீ கேட்டதுக்கு பதில் சொல்லனும்னா.. ஒன்னே ஒன்னு சொல்றேன்… சாதிச்சன்றிதழ்-ல மாத்தனும்னு நீ கேக்குறது …
இத்தனை நாள் ஒருத்தனுக்கு கிடைக்கவேண்டிய ஒரு அடிப்படை உரிமையை நீ திருடுறதாகும்… இந்த System கொண்டு வந்ததோட முதன்மை நோக்கமே… வாய்ப்பு மறுக்கப்பட்டு… ஒடுக்கப்பட்டு… உன்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியாத இன்னல்களை சந்திச்ச ஒரு இனத்துக்கான ஒரேயொரு வாய்ப்பே இந்த இட ஒதுக்கீடு தான்… அதையும் நீ திருடனும்ங்கிற எண்ணம் வளத்துக்காத.. ரொம்பவும் தப்பு..

எனக்கு அப்பா சொன்னதுலயே.. ரொம்பவும் யோசிக்கவைச்சது… அவனது உரிமைய திருடுறதுனு சொன்னது… அப்ப தான் தேட ஆரம்பிச்சேன்…
எப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கெல்லாம் அந்தந்த இனத்தை சேர்ந்தவர்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்று…
அதையெல்லாம் படித்த பிறகு…முழுமையாக இதனை ஏற்பவனாக மாறிவிட்டேன்…

தற்போது.. மிகவும் Irritate செய்த அந்த இரண்டு மீம்களுக்கு வருவோம்..
முதல் மீம்..






சாதியை ஒழித்து மனிதத்தை வளர்த்திட சாதிய இட ஒதுக்கீட்டை அழித்திடவேண்டுமாம்.. ஏண்டா? உங்களுக்கு புரியவே புரியாதாடா?
சாமி சொன்னதா எதோ நாய் சொன்ன சாத்திரத்தை நம்பிக்குட்டு.. நம்ம பாட்டனுங்கெல்லாம் அவங்களுக்கு செய்த கொடுமைகளுனால அவர்களால இந்த சாதி ஒதுக்கீடுக்கப்புறமும் எந்திரிச்சு வர்றமுடியல… அதற்கு பலவேறு அரசியல் நோக்கங்கள் இருந்தாலும்… அவர்களின் முன்னேற்றத்துக்கு இருக்க அந்த ஒரெ ஒரு வாய்ப்பையும் புடுங்கனுமா டா?

சாத்திரத்தை நம்பி இருந்த நம்ம கண்ண தொறந்ததே அந்த மாமேதை அம்பேத்கர் ஐயாவோட சட்டம் தான்…

தீண்டாமை ஒரு பாவச்செயல்-னு எழுதி புத்தகம் போடுற நம்ம அரசாங்கம், அது இன்னும் நிலவுவத வச்சுத்தான் அரசியலே செய்யுதுங்குறது ஒரு வெட்கக்கேடு…

இரண்டாவது மீம்,



இந்த படத்த பாருங்களேன்… என்னமோ அனைத்து சலுகைகளையும் பிற்படுத்தப்பட்டோர் உரிந்துக்கொள்வது போலவும்… இந்த உயர்சாதி பெருமக்களுக்கு ஒரு துளி தான் மிச்சம் இருப்பது போலவும் ஒரு மாயையான பிம்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளன..

இந்தியாவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட தலித் சமுதாய தோழர்களின் வாழ்வாதார உயர்வு என்பது மிகவும் கணிசம் தான்… மிகவும் குறைவு… இந்தளவுக்கான ஒரு முன்னேற்றத்திற்கே இங்கு இவ்வளவு பயம் என்றால்… நினைத்துப் பாருங்கள் அனைவரும் முன்னேறிவிட்டால் ? பைத்தியம் ஆகிவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது..

படிக்கும்பொழுதே… Green Card-ஐ இலட்சியமாகக் கொண்டுள்ள நமக்கு எதற்கு இந்த கவலையெல்லாம் ? சொல்லுங்கள். ஒருவேளை அந்த இலட்சியம் நிறைவேறவில்லையென்றால் இந்தியாவிற்குள்ளே பீற்றிக்கொள்ளும் அளவில் ஒரு அரசு உத்தியோகம் பெற இந்த இட ஒதுக்கீடு தடையாக உள்ளதால் பொறாமையா?

உன் தாத்தன் படிச்சு… உன் அப்பன் படிச்சு… நீ படிச்சு.. உன் பரம்பரையே படிச்சு .. DNA – la யே கல்வியை வச்சிருக்கம்போது… ஒரு ஒடுக்கப்பட்ட பையன்… அப்பன் ஆத்தா கூலி வேலை பாத்து… அவன் பரம்பரையிலேயே அவனுக்கு தான் கல்வி ஒரு வாய்ப்பா அமையவே அவனுக்கு அந்த சட்டம் தான் உதவிருக்கு.. அந்த சட்டத்தையும் அழிச்சு… மறுபடியும் முதல்லர்ந்து… நீங்க மட்டுமெ படிச்சு… வாழ்க்கையில முன்னேறி.. இந்த மக்கள மீண்டும் ஒடுக்குவீங்க ல?? அதானே வேணும் உங்களுக்கும்…

இதுதான் சாதிய ஒழிச்சு மனிதத்த மக்களிடையே விதைக்குறதா?

இந்த கானொளியைப்பாருங்க…



என்று ஒரு உயர்சாதியைச்சேர்ந்தவன் மலம் அள்ளுகிறானோ.. அன்று
இந்த சாதிய இட ஒதுக்கீடு என்பது ஒழியட்டும்…
அதுவரையில் இது தொடரட்டும்..
பொறாமைப்படாமல் இதை ஏற்றுக்கொண்டுப் பயணியுங்கள்..

சாதி வேறொழிய வேண்டும்,
சமத்துவம் பிறந்திட வேண்டும்.



ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...