Saturday 30 January 2016

பாண்டே, கேள்விக்கென்ன பதில்..??














வணக்கம் நண்பர்களே,
என்னுடைய இன்றைய கருத்துப் பதிவு தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை நடத்தக்கூடிய திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களை குறித்ததாகும்.

முன்னர்,
இவரது தொடக்க கால நிகழ்ச்சிகளை கண்ட பொழுது இவரது கேள்விக்கனைகளை கண்டு பெரிதும் வியந்து,
“அடடா!! *முதல்வன்* அர்ஜுன் போல ஒருவன் வந்துவிட்டானப்பா, இனி அரசியல்வாதிகளின் நாக்கை பிடுங்கி, உண்மை முகத்திரை கிழிக்க போகிறான் என்று கனவெல்லாம் காண ஆரம்பித்தேன் ஒரு சாமானியனாக.
அவரது மின்னல் வேக கேள்விகளும்… வந்திருக்கும் விருந்தினரை மடக்கும் தந்திரமும் மிகவும் பிடித்துப் போக அவரது இரசிகனாகவே மாறிப்போனேன்.

ஆனால் இன்றளவில்,
இவரது நேர்காணல்களை காணும்பொழுது எமக்கு புரிதலுக்கு வரக்கூடிய  விடயங்கள் என்னவென்றால் தான் சிறப்பான, தைரியமான , மிகவும் சாமர்த்தியமான ஒரு நிருபர் என்று தன்னை பிரகடனபடுத்திக்கொள்ளும் நோக்கத்தில் அவர் வரும் விருந்தினர்களிடையே கேள்விக்கான பதில் முழுதாய் சொல்லி முடிப்பதற்குள் நடு நடுவே மடக்குகிறேன் என்ற நோக்கத்தில் விருந்தினரது பதிலை திசைத்திருப்பி பதில் சொல்ல வந்தவரையும் முட்டாளாக்கி, நேர்க்காணல் கானும் மக்களையும் முட்டாளாக்கி தான் மட்டும் சாமர்த்தியசாலி எனும் பெருமையடைவதில் என்ன ஆனந்தம் திரு.பாண்டே அவர்கட்கு என எனக்கு சிறிதும் விளங்கவில்லை..

ஒருவன் பதில் சொல்ல முனையும்பொழுது குறுக்கிடாமல் இருத்தலே ஒரு ஒழுக்கமான நேர்காணலாகும். எனக்கு பெரிதும் சந்தேகம் என்னவென்றால் இவரது வேலை கேள்வி கேட்டு விருந்தினரிடமிருந்து பதில் வரவைப்பதா? அல்லது விருந்தினரை மடக்கி, தடுமாறச்செய்து அவனை தன் நிலை குலையசெய்வதா?


மற்றொரு விடயமென்னவென்றால்,
திரு.பாண்டே அவர்கள் தன்னுடைய சாமர்த்தியத்தையும், ஆதிக்கத்தையும் திரு. கி.வீரமணியுடனும், திரு.நாஞ்சில் சம்பத்துடனும், திரு. பழ.கருப்பையாவுடனும் காட்டியது போல திரு.இராமகோபாலனிடமோ மற்றும் பிற பா.ஜ.க பிரதிநிகளுடனான நேர்காணல்களில் காட்டவில்லையே ஏனென்ற கேள்வி பார்வையாளர்களான நமக்கு உதிக்கிறது..

ஆனால்,
இவரது கேள்விகளெல்லாம் மக்களாகிய நமது மனதில் உள்ளது போல் இருந்தாலும்… இவரது நேர்காணல் முறையென்பது அக்கேள்விக்கான பதில் கிடைப்பதை தவிர்த்து, விருந்தினரை திசை திருப்பி பதிலைப் பிசக செய்வதாக மாறிப்போகும் காரணத்தால் மக்களாகிய நாம் விரும்பிய கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கான விடையை அறிந்து கொள்ளாமல் போவதற்கு ஆளாகின்றோம். இதுபோன்ற இவரது செயல்பாடுகள் இனியும் தொடருமேயானால், இந்நிகழ்ச்சியும் அரசியல் சாயம் பூசப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவும், *T.R.P* க்காக நடத்தப்படும் ஒரு சமூக அக்கறையற்ற ஒரு ”ரியாலிட்டி ஷோ” போலவே மக்களைச் சென்று சேரும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

எனவே,
பாண்டே தனது ஆதிக்கத்தை குறைத்துக்கொண்டு விருந்தினரிடமிருந்து அவர் கூற வரும் பதிலை கூறும் வரை பொறுமைக காக்க வேண்டுகிறோம். தனது சாமர்த்தியத்தை சற்றே புறம் தள்ளி விட்டு, சமூக நோக்கத்தை முன் நிறுத்தி செயல்பட்டால் எட்டா உயரத்தையும் எட்டும் வல்லமை படைத்தவராக பாண்டேவை நாம் வரும் காலங்களில் காணலாம்.

நன்றி!!


Thursday 28 January 2016

இப்படிக்கு, சமூகம்.















சமூக அநியாயங்களை உரக்கச்  சாடுபவன்,
ஆற்றாமைக் கொண்டவன்

சத்தியமும் தர்மமும் வாழ்க்கையாய் கொண்டவன்,
பிழைக்கத் தெரியாதவன்

மனத்தில் இருந்து கலங்கமின்றி பேசுபவன்,
பேசத்தெரியாதவன்

இயலாதவனுக்கு இயன்றதை தருபவன்,
நடிகன்

இருப்பதனைத்தையும் தானம் செய்வதுபோல நடிப்பவன்,
தலைவன்

நுனிநாக்கில் பிறமொழி பேசி
அடிநாக்கில்  அரைவார்தை கூட தமிழ் கதைக்காதவன்,
அறிவாளி

பகுத்தறிவு பேசுபவன்,
முட்டாள்

பட்டை நாமம் அணிந்துக்கொண்டு
ஆலயத்தினுள் அரைக்கால்
சட்டை அணிந்து வரும்
பெண்டிற் பின்னழகை இரசிப்பவன்,
பக்தன்

பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டுமே
எமக்கு ஆண் தேவை என்பவள்,
பெண்ணியவாதி

அன்புறும் மனைவிக்கு சேவை செய்பவன்,
பொட்டை

இனத்தின் விடுதலைக்கு உயிர் நீத்தவன்,
தீவிரவாதி

இனத்தலைவன் இனத்தலைவனென
இன்னல்களெதுவுமே கண்டிராமல்
கண்டனங்கள் மட்டும் தெரிவிப்பவன்,
புரட்சிப் போராளி

இப்படிக்கு,
சமூகம்.







Monday 11 January 2016

வாழ்வது தமிழாகட்டும்…



காதலியின் விழி பறிக்க
காளையனாய் மாறி
சீறி வரும் சின்னமனூர்
காளையின் திமில் தழுவும்
புணைப்போடு புழுதி பறக்க
ஏரின் திமில் மீதேறி அதன் திமிருடைத்து
தீரனாய் வெற்றிக்கண்டான்
வீரத்தமிழன்…

வீரத்தமிழனின் விண்ணுயர
மேன்மைகளை வழி வழியே
சேர்த்திடினும்,
சேரா எதிரிகள் முதலில்
மதம் கொண்டு கலைத்தனர்,
பிறகு சாதி கொண்டு கலைத்தனர்,
இப்பொழுது வியாபாரம் கொண்டு கலைக்கின்றனர்

அன்னைத்தமிழ் இருக்கையில்
அழகு கொஞ்சும் பிள்ளைக்கு
அண்டை மொழி பெயர் எதற்கு?
பாலோடு தமிழூட்டி
தமிழோடு கர்வமூட்டி
ஈராயிரம் பழமை பண்பாட்டை
இதயத்தில் விதைப்பது
தமிழனின் கடமை

அன்பின் உயிர்ப்பாய்
அன்னைத்தமிழ் இருக்கவேனும்
அறமோடு வாழ
திறனோடு ஓட
இதயத்தில் தமிழ் இருக்கவேனும்
வீழ்வது எதுவாகினும்
வாழ்வது தமிழாகட்டும்…



ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...