Wednesday, 4 September 2019

ஈழத்தில் நான்


வணக்கம் நண்பர்களே,
பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு.

ஈழத்தில் நான்,

ஆகத்து 10,

என் வாழ்வின் மிக உன்னதமான, மிக ஆழமான இதயத்திற்கும், நேசத்திற்கும், மிகவும் ஆத்மார்த்தமானதொரு பயணத்தை எதிர்நோக்கி காத்திருந்த நாள். 

விமானத்திலிருந்து இறங்கி இலங்கையை அடைந்தாயிற்று. அந்த தேசத்தை நுழைந்த அடுத்த கணமே வாழ்வின் முதல் சோதனை. சிங்கள காவல் அதிகாரி என்னையும் என் பயணமூட்டைகளையும் முழு சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென அழைத்துச் சென்று ஒரு 20 நிமிடங்கள் பயண விவரங்களை குறித்து கேள்விகள் கேட்டுவிட்டு முழு சோதனையிட்டு அனுப்பினர். 

அவர்களிடம் சொல்லிவிடவா முடியும் என் தலைவன் சுவாசித்த காற்றை சுவாசிக்கத்தான் இங்கு பயணமானேன் என்று? என் இதயத்திற்குள் சொல்லிக்கொண்டேன். 















ஓர் மகிழுந்தில் என்னை என் நண்பன் விஷ்வா வடக்கு மாகாணம் அழைத்து சென்றான். நெடும்பயணம் அது. அந்த நெடும்பயணம் முழுக்க எனக்கு பேரன்பும், நேசமும், கொஞ்சமும் பயமும் கலந்தனவாகவே பயணமானது. 

வவுனியாவை நாங்கள் எட்டியதை தொட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வரை ஒவ்வொரு அரை கிலோ மீட்டருக்கும் இராணுவம் எங்களது கடவுச்சீட்டை சோதித்து பயணக்காரணம் கேட்டது. 
பலத்த சோதனைகளையெல்லாம் கடந்து யாழ் மண்ணை அடைந்தோம்.

ஈழத்தை அடைந்ததும் ஆயா'வை தொடர்புக்கொண்டு உங்கள் ஐயாவின் ஊருக்கு வந்து சேர்ந்தேன் என்றதும் அவர் உடனே யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரின் சிலை இருக்கும். அங்கே சென்று மரியாதை செய். அவர் உன் பாட்டனார் சொக்கலிங்க ஐயாவின் தமிழ் ஆசான் என்றார். 

(பி.கு. Arumuka Navalar https://g.co/kgs/YpPhKG)


வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு பேரின்பம். அங்கு விஷ்வா'வுடன் பணிபுரியும் ரீகன் எனும் தோழர் எங்களை தலைவரின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தயாராக இருந்தார். 

என் வாழ்நாள் கனவிது என்பதை நன்கு  உணர்ந்திருந்த விஷ்வா எல்லாம் தயார்படுத்தி வைத்திருந்தான். 
ரீகனும் நானும் ஒரு வண்டியிலும், விஷ்வா தனியே இன்னொரு வண்டியிலும் வல்வெட்டித்துறையை நோக்கி பயணமானோம். 
















பல்வேறு காரணங்களை சுமந்துக்கொண்டு பயணமாகிறேன். வல்லை மண்ணுக்கு இன்னும் 30 கி.மீ பயணம் காத்திருக்க, பயணம் முழுதும் ரீகனுடன் ஈழத்தின் அரசியலையும், ஈழத்தின் எதிர்காலமும், போர் அனுபவங்களும், தலைவரின் கனவுகளும் என எல்லாம் பேசினோம். அவருக்கான என் பேரன்பு காலத்திற்கும் நிலைத்திருக்கும். 

வல்லையை நுழைந்தோம்,
தலைவரின் வீடிருந்த பகுதியை நுழைவதற்கு முன்னதாய் வாசலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மாலையிடப்பட்ட சிலை அங்கிருந்தது. 
















புலிகளுக்கு உதவியதன் நன்றிக்கடனாய் அந்த மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது அந்த நினைவகம். அதை கடந்து தலைவர் பிறந்த வீடிருந்த பகுதியை அடைந்தோம். 














இதோ இந்த இடம் தான் தலைவரின் வீடிருந்த இடம். அதன் தடம் இல்லாதவாறு தகர்த்தழிக்கப்பட்ட நிலையில் செடிகளும் மரங்களும் படர்ந்து ஆள் அரவற்றமாக காட்சியளிக்கிறது. ஆனால் அவர் வீடிருந்த இடம் இதுவே என சுமக்கும் ஒரு மதில் மட்டும் அங்கிருந்தது.

இதயத்துடிப்பு இரு மடங்கானது. தரையில் நிற்க கால்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருபக்கம் இராணுவமோ, காவல் அதிகாரிகள் யாரேனும் வந்துவிட்டால்  என்ன ஆவதென்ற பயம் ஒரு பக்கம். தலைவரின் பாதம் தொட்ட மண்ணில் தான் நாம் நிற்கின்றோம் என்ற கர்வம் ஒரு பக்கம் என அவ்வுணர்வை எழுத்தில் கடத்தவே முடியாது. 
பேரனுபவம் அது. 















அங்கிருந்து வடக்கின் எல்லைப்புள்ளியான பருத்தித்துறையை சுற்றித்திரிந்தோம். அந்த எல்லையிலிருந்து இந்திய தேசத்திற்கு சொல்லிக்கொண்டேன்,

ஈழமாய் ஓர் நாள் மலர்வோம்,
இன்னும் என் தலைவனின் சுவாசம் காற்றில் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றது. இங்கு சிந்தப்பட்ட ஒவ்வொரு உதிரத்துளிகளும்  போர் விதைகளானது முளைத்து அதற்கான அரசியலை அவை மீண்டும் பேசும். மாற்றங்களே வினா எனில் மாற்றங்களே விடையாகும்.

என் காலத்தின் ஒப்பற்ற போராளி வாழ்ந்த, வாழ்கின்ற இடத்தில் சில மணி நேரம் வாழ்ந்ததே இந்த வாழ்க்கைக்கான ஓர் அர்த்தத்தை உணர உதவுவதாகிறது. 

தலைவா,
நீ உயிரோடிருக்கின்றாயெனில்
நீ எம் தலைவன்,
நீ உயிரோடில்லையெனின்
நீயே எம் இறைவன். 

இதயத்தின் ஆழத்திலிருந்து மூவருக்கு பேரன்பின் முத்தங்கள்,



1. ரீகன் 










(பி.கு. ரீகனின் வாழ்க்கை அனுபவங்களை தனியே ஒரு பதிவாக எழுத இருக்கிறேன்) 




2. விஷ்வா,


3.நல்லூர் கந்தசுவாமிப் பெருமான்.




நன்றி,
வணக்கம்.




2 comments:

  1. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

    ReplyDelete

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...