Sunday 1 April 2018

பிரியாணி ஆடுகள்






















சூரியக் கதிர்கள் சன்னல்களின் மூடிய திரை வழி ஊடுருவி வந்து

உறக்கத்தை கலைக்க முற்பட்டு தோற்கும் தினமான ஞாயிறன்று
எவரெழுப்பினாலும் கட்டிலில் இருந்து நகராமல் உருண்டு பிரண்டு கனவுக்கும், முழிப்புக்கும் இடையிலான ஒரு உலகில் மிதக்க ஆசைப்படும் சாமானிய இளைஞனில் நானும் ஒருவன்.

அம்மாவின் கூக்குரலையும், அப்பாவின் அக்கறை அர்ச்சனைகளையும் செவிகள் ஒரு அளவிற்கு மேல் பொருத்துக்கொள்வதில்லை. தலையெழுத்தே என்று எழுந்து பல் துலக்கலானேன். பற்கள் மட்டுமல்லாது கனவும் கொஞ்சம் துலக்கப்படுவதை உணர்ந்து,

மூடிய வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்து வாய் கொப்பளித்துக் கொண்டே கனவை Decode செய்ததில்,

எங்கோ கை-கால்கள் கட்டப்பட்டிருக்கிறேன்,
என்னைப் போலவே  எனை சுற்றியுள்ளோரும் அரை நிர்வாணம்,
மெதுவாய் ஊர்ந்து செல்கின்றோம்,
இரு பக்கமும் நாங்கள் அறியாத மொழியவர் எங்களை அரிவாள் முனையில் அழைத்துச் செல்கின்றனர்,

எனைச் சுற்றி நான் திரிந்த அந்த காடுகள் என் சுவாசத்தை முகர்ந்து எனக்கே அருள்வது போல எனக்கு காற்றை வீசியது. படர்ந்திருந்த புல்வெளி என் கால்களை தாங்குவதில் ஒரு பெருமை கொள்வதாய் என் பாதத்தை வருடியது. செல்லும் பாதையில் துணையாய் மேகமும், தூரத்து மரக்கிளையில் தவ்வி குதித்து பிடுங்கிய பழங்கள் என்னைப்பார்த்து ஒரு ஏளனச்சிரிப்பிடுகிறது. இடையிடையில் எதோ ஒருவகை வினோத கண்கள் கொண்டு என்னை இழுத்துச்செல்லும் அந்த மொழியறியாதவனை பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்.

கதவைத் தட்டிய அப்பா,
‘சீக்கிரம் வெளிய வாடா , கறிக்கடைக்கு போகனும்’ என்று குரலிட.
என் கனவு Decoding Session’ஐ  கொஞ்சம் தள்ளிப்போட்டு பிரியாணிக்கான பிரியத்தில் கிளம்பி எங்கள் ஏரியாவில் உள்ள இராமநாதபுரத்து பாய் கடைக்கு சென்றேன்.
ஐயா காலத்திலிருந்து பாயின் ஆட்டுக்கறி என்றால் தனிச்சுவை தான்.

பிரியாணி, உப்புக்கறி, குடல், தலைக்கறி, ஈரல், கொழுப்பு, இரத்தப்பொறியல் என்று ஆட்டின் எந்த ஒரு உறுப்பையும் சுவையாக்கி வெல்வதில் நாக்கிற்கு விடாத பயிற்சிக் கொடுத்தே வளர்ந்துள்ளேன்.

பாய், ஒரு கிலோ மார்கண்டம் குடுங்க என்று சொல்ல,
அவர் வெட்டித் தொங்கும் கறி ஸ்டாக் தீர, உடனே அவர் மகனுக்கு ஃபோன் செய்து இரண்டு ஆட்டைக்கொண்டு வரச்சொன்னார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில்,
இரண்டு ஆடுகள் ஒன்றின் மேல் ஒன்றாய்  கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கி வரப்பட்டது. எடுத்துக்கொண்டு கடைக்குள் சென்ற அவர் மகனும் அந்த கடையில் இருந்த இன்னொருவரும் ஆட்டை அறுக்க ஆயத்தமானார்கள்.

பாய், லேட் ஆகுது ஒரு கிலோ சீக்கிரம் குடுங்க என்று சொல்ல,
அங்கு கட்டப்பட்ட ஒரு ஆடு என்னை உற்று நோக்கியது. என் கண்கள் ஒரு கிலோ மார் கண்டத்திற்கு படும் அவசரத்தை உணர்ந்த அது என்னிடம் அதன் கண்கள் வழி,
‘இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கூடுதலாய் இந்த உலகில் வாழ விரும்புகிறேன், கொஞ்சம் பொறுமை காக்கலாமே’ என்பது போலான பார்வையது.

ஆனால்,
ஐந்து நிமிடம் வாய்க்காத அந்த ஆடு,
என்னைப் பார்த்த படி அந்த அரிவாளின் கீரலை சத்தமேதுமின்றி ஏற்கின்றது. அதன் சின்ன வால் துடிக்க துளி சத்தமின்றி தலையை ஒரு சட்டியின் மீது வைத்து இரத்தத்தை சிந்தாமல் பிடித்துக்கொண்டே தலை தனியாகி ஓரமாய் வைக்கப்பட்டது.

அதன் நெஞ்சு இன்னுமும் துடிக்கின்றது. அதன் ஒவ்வொரு காலை அரிவாளால் சீவி உடைத்து தனித் தனியே பிரித்தடுக்கினர். நான் கேட்ட ஒரு கிலோ மார்கண்டத்தை பீஸ் பீஸாக வெட்டி கருப்பு பிளாஸ்டிக் பையில் கொடுத்தார். காசைக்கொடுத்து விட்டு வீடு வந்து அமர்ந்து மீண்டும் Decode செய்ய முயற்சித்துக்கொண்டே இருந்தேன், சுத்தமாய் Sync ஆகாத என்னால் அதைத் தொடர முடியவில்லை.

மதிய உணவிற்கு வயிறு பெல் அடிக்க,
அம்மா சுடச்சுட பிரியாணி பரிமாறுகிறாள். எப்பவும் போல ‘இந்த பீஸ் வை, ஹான் அது, இது வை’ என்று பறக்க,

மிருதுவான அந்த கறியை பிரியாணி மணத்தோடு கண்கள் மூடி நாக்கிற்கு கொண்டு செல்லும் தருவாயில்,
அந்த ஆட்டின் கடைசி நொடிப் பார்வை கண்களுக்குள் வந்து போக,
அந்த கனவின் முடிவும், நோக்கமும் உணர்ந்தது.

இன்றைய பிரியாணியில்,
கறி சுவையாக இல்லை.


ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...