Sunday, 16 September 2018

பெரியார் 140













At the Age of 5-10,
தெய்வ வழிபாட்டின் மீதும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த நான் அந்த வயதில் ஒரு ராம.நாராயணன் படத்தையும் விட்டு வைத்ததே இல்லை. பக்த பிரகலாதா படத்தை ஓராயிரம் முறையேனும் பார்த்து சீ.டி'க்களை தேய்த்திருப்பேன். அத்தனை தீவிரமான கடவுள் பக்தன்.

ஆன்மீகத்தில் அடுத்த படிக்கு முன்னேறிய நான்,
கோவில்களின் வெளியே இருக்கும் கடைகளில் கடவுளர்களின் Miniature Metal சிலைகளை வாங்கி வந்து வீட்டில் சந்தனம் கரைத்து பூசைகள் செய்தெல்லாம் வந்திருக்கிறேன்.

பொம்ம கார், பைக்குகளையெல்லாம் விடவும் இந்த கடவுளர்க்கு செய்யும் சந்தனம், குங்குமம், விபூதி அபிஷேகமெல்லாம் இன்னும் மகிழ்ச்சியுறுவதாக இருக்கப்போக, என் அம்மாவோ ஒரு தெய்வாதீனமான மகனை பெற்று விட்டோம் என்ற அதே மகிழ்ச்சியில் என் அப்பாவிடம் இந்த கூத்தையெல்லாம் சொல்ல அப்பா சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அவனை அவன் போக்கிற்கு விடு என்றார்.

ஆனால்,
இரண்டொரு வாரத்திற்கும் மேலாக இதனை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் என்னை மடைமாற்றுவதற்கு நான் கடவுளர் சிலைகளை வைக்கும் அந்த டப்பாவின் மேலே பெரியார் என்ற ஒரு புத்தகம் வைத்திருந்தார்.

மறுநாள் அந்த புத்தகத்தை எடுத்து அந்த வெண்தாடி கிழவன் முகத்தை மட்டுமே ஒரு ஐந்து நிமிடம் விழி அசையாது பார்த்து கொண்டிருக்கிறேன்,
அந்த கண்களில் இந்த ஒடுக்கப்பட்ட மானுடத்தின் மீதான பேரன்பின் அருவியாய் அன்பும், உரிமைக்கதிரான முழக்கமும் வழிவதை உணர்ந்து அப்பாவிடம் முதல் முறையாய் கேட்டேன்,

அப்பா, யாரு இந்த பெரியார் தாத்தா?
அப்பா:- யாரு  காந்தி தாத்தா?
இந்திய தேசத்தின் தந்தை.
அப்பா:- பெரியார் தமிழர் தந்தை.
நான் ஓவென்று வாய் பிளப்பதற்குள் சரி, அந்த கடவுளர் சிலையெல்லாம் சாமி அறையில வச்சிட்டு போயி படி என்று அப்பா சொல்ல,

இப்படித்தான் தொடங்கியது எனக்கு பெரியாருடனான அறிமுகம்.

பூஜை புனஸ்காரங்களெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த மானுட முன்னேற்றத்திற்காக, மானுட சமத்துவத்திற்காக, மேம்பாட்டிற்காக உன் அறிவாயுதம் கொண்டு சிந்தித்து அனைத்து விதமான சமூக அநீதிகளுக்கும் எதிராய் போராடு என்று சொன்ன மாபெரும் தலைவனை எனக்கு அறிமுகப்படுத்திய என் தந்தைக்கும், நம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக மூத்திரைப்பை ஏந்தி முதுகிழத்திலும் போராடிய தந்தை பெரியாருக்கும் கோடி நன்றிகள்.

இன்று வரையிலும், கடவுள் மறுப்பென்ற ஒரு புள்ளியில் மட்டும் அவரை அனுகுவதை தாண்டி அவர் இந்த மானுட சமூகத்துக்கென முன்னெடுத்த அத்தனை போராட்டங்களையும் நாம் பயில வேண்டிய தேவை இன்றைய சூழலில் மிகவும் அவசியமாக உள்ளது.

சமூக நீதி, சமதர்மம், சமத்துவம், பெண்ணிய விடுதலை என்று  இவை அனைத்திலும் இன்றும் அவர் பயணித்த எல்லா பாதைகளின் மீதும் நாம் நடக்க வேண்டிய தேவை இருப்பதாகவே உணர்கிறேன்.

வாழ்க பெரியார்🖤❤️🖤

ஓவியம்: ஓவியர் Trotsky மருது.




Wednesday, 8 August 2018

கலைஞரே, நான் கலங்கேன்



















எழுந்து வா எழுந்து வா என
எத்தனை குரல்கள்
கவிழ்ந்து போ கவிழ்ந்து போ
என எத்தனை குரல்கள்

எழுதவே விரும்பாத
இரங்கற்பா கவிதையை
எழுத வைக்கிறது
இயற்கையின் சதி வலையே

துயரெல்லாம் சொல்லாக
அரசியலை நடையாக
உன்னை தமிழாக கொண்டு
எழுதுகிறேன் கலைஞரே

மரணம் தான் நிரந்தர
ஓய்வென்று நம்பியிருந்தேன்
இல்லையென நிரூபித்த
ஓய்வறியா சூரியனே

உயிர் போராடி மாய்ந்ததென
உள்ளம் மகிழ்ந்த எதிரிகளை
மயிர் அளவும் மதியாது
உடல் கொண்டு வென்றாயே
  
தமிழ்த்தாயின் கண் கண்டேன்
ஓரமாய் துளி கண்ணீர்
கடைக்குட்டி கண்கள் மூடி
உறங்குவதை கண்டு

திராவிடத்தின் குரலாக
உடன்பிறப்பை விதைத்திட்டு
சமத்துவமும் சமூக நீதியும்
முழுமூச்சாய் கொண்டவனே

மூச்சு நின்ற பின்னும்
முயன்று வென்றாயே
எவனுக்கு அமையுமையா
இத்தகைய வாழ்க்கையும் ?
இத்தகைய மரணமும்?

மஞ்சள் துண்டும்,
கருப்பு கண்ணாடியும்,
சொகுசு நகரும் நாற்காலியும்,
தடித்த மைப்பேனாவும்
எம்மோடு சேர்ந்தே அழுவதை
கேட்கிறேன்

உயிர் கொண்டு போராடி
வென்ற கதை உண்டு
மரித்த உடல் கொண்டு போராடி
வென்ற எவன் உண்டு சொல்லும்?

தந்தை பெரியாரின் 
குரல் தேடி
தாய் அண்ணாவின்
மடி தேடி
சமத்துவ அரசியல் கதைக்க
சென்றாயா தமிழ் மகனே?

கலைஞரே,
நான் கலங்கேன்
நீ செய்ததெல்லாம்
நான் உணர்கிறேன்
கலைஞரே
நான் கலங்கேன்


வாழ்க தமிழ்,
வாழ்க கலைஞர்,
தமிழ் வெல்லும்.


பழ.கார்த்திக் சம்பந்தன்
08/08/2018



Wednesday, 25 July 2018

முரண்படு







இந்த வாழ்க்கை அழகான முரண்களால் ஆனது. இதயம் மூளையுடன் கொள்ளும் முரணும், மூளை இதயத்துடன் கொள்ளும் முரணும் தான் இந்த மனித உடலின் Engine.

முரண்களை கொண்டாடுங்கள். முரண்படுவதால் விமர்சிக்கப்படலாம். ஆனால், அந்த முரண்கள் தான் உங்கள் அறிவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கின்றது.

தன்னைத் தானே ஒருவன் முரண்படாமல் எக்காலமும் இருக்ககூடமாயின் அவன் முட்டாளாகத்தான் இருக்கின்றான் என்பதை அறியாமலேயே அவன் அத்தகைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டான். அது அவன் சுய உரிமை என்பதில் மாற்று கருத்தில்லை.

முரண்களை கண்டு மனிதர்கள் அச்சப்படுவதும், அதை தனது Guilty Consciousness கொண்டு அனுகுவதும் தேவையற்றது. அந்த முரண்கள் காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றது போல தன்னைத்தானே உருமாற்றிக்கொள்கிறது என்ற சூழலிய தத்துவத்தையும், காலத்தின் மாற்றத்தையும் நாம் உணர வேண்டும்.

முரண்படுவதற்கு அஞ்சாதீர்கள்,
முரண்பாடுகள் ஒரு ஜென் நிலைக்கான தொடக்கம்.

It's a Path of Paradox.


Friday, 8 June 2018

காலா எனும் இராவண காவியம்🖤❤️💙











(Pic.Courtesy:- Erumai Made FB)

​காலாவை வெறும் படமாக கடந்து செல்ல முடியவில்லை. காலா ஒரு பிரகடனம்.
பேசவே மறுக்கப்பட்ட ஒரு அரசியலின் திரை வடிவம் தான் காலா.

காலம் காலமாக
காலாவதியான கட்டுப்பாடுகளையும்
வார்ப்பு வகைமையையும்(Stereotypes)
கட்டுடைத்து பேசிய அரசியல் தான் காலா.

ஹரி தாதாவின் கால்களை தொட்டு கும்பிட்டு போ என்று அவர்களின் சுயமரியாதையை உரசிப் பார்த்ததும் அங்கிருந்த அவர்கள் நகர்ந்த பின்னர்,
மாலை அணிவிக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலைக்கு அருகில் அவர்கள் நிற்பது போலவும்,

தெருவில் போகும் யாரோ ஒரு பெண்மணி,
*இவனுங்களுக்கு இந்த மாறி அசிங்கப்பட்டா தான் புரியும், சொன்னா'லாம் புரியாது* என்று கடந்து செல்வதும் நுட்பமான அரசியல் பாடம்.

காலா அம்பேத்கர், பெரியார் அரசியலையும்,

ஜரீணா காந்தியின் அரசியல் சாயலையும்(பல பேர் முரண்படலாம், ஆனால் இது என் Interpretation மட்டுமே)

ஹரிதாதா ஆதிக்க அதிகார வர்க்கத்தின் அரசியல் சாயலையும் சுற்றி கதை சுழல்வது எங்கோ சிலிர்க்க செய்து கொண்டே இருக்கிறது.

பராசக்தி, இரத்தக்கண்ணீர் ஒரு அரசியல் உரையாடலை மக்களிடையில் திறந்த வெளியில் அக்காலக்கட்டத்தில் கொளுத்திப்போட்டது. அவை இரண்டும் அன்றைய அரசியல் சூழலில் மிக நுட்பமாக கவனிக்க வேண்டிய இரண்டு படங்கள். திராவிட கொள்கையின் பிரகடனம் அவை இரண்டுமே.

காலா தற்காலச்சூழலில் மிக முக்கியமான பிரகடனம்.
கருப்பும்,சிகப்பும்,நீலமும் இந்த மனிதர்களின் மீது படர்ந்த பின்னர் ஒட்டுமொத்த சமூகமும் பல்வேறு வண்ணங்களாய் ஜொலிக்கும் காட்சி,
திரை வடிவத்தில் மிக நுட்பமான அழகியல் தன்மையான ஓவியம்.

ஒத்த வார்த்தையில சொல்லனும்னா,
காலா எங்களோட
இராவண காவியம்❤️

இந்த மானுடத்தின் மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான ஒட்டுமொத்த,
நில அரசியல், நிற அரசியல், அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியல், ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான அரசியல், சுயமரியாதை அரசியல் என்று மாண்பை மீட்டெடுக்க ஆயுதமாய் இருக்கும் அத்தனை அரசியலையும் இந்த சமூகத்திற்கு காட்சி வடிவில் பிரகடனபடுத்திய தோழர் இரஞ்சித்திற்கு நன்றிகள்.

தான் தேர்ந்தெடுத்த அரசியல் இது இல்லை என்று தெளிவாய் தெரிந்த பின்பும் இந்த அரசியலை காட்சிமயமாக மாற்ற வேர்ற லெவல்'ல நடித்திருக்கும் ரஜினிக்கும் பெரும் நன்றிகள்.

காலா எனும் இராவண காவியம்🖤❤️💙🖤❤️💙🖤❤️💙🖤❤️💙


Sunday, 1 April 2018

பிரியாணி ஆடுகள்






















சூரியக் கதிர்கள் சன்னல்களின் மூடிய திரை வழி ஊடுருவி வந்து

உறக்கத்தை கலைக்க முற்பட்டு தோற்கும் தினமான ஞாயிறன்று
எவரெழுப்பினாலும் கட்டிலில் இருந்து நகராமல் உருண்டு பிரண்டு கனவுக்கும், முழிப்புக்கும் இடையிலான ஒரு உலகில் மிதக்க ஆசைப்படும் சாமானிய இளைஞனில் நானும் ஒருவன்.

அம்மாவின் கூக்குரலையும், அப்பாவின் அக்கறை அர்ச்சனைகளையும் செவிகள் ஒரு அளவிற்கு மேல் பொருத்துக்கொள்வதில்லை. தலையெழுத்தே என்று எழுந்து பல் துலக்கலானேன். பற்கள் மட்டுமல்லாது கனவும் கொஞ்சம் துலக்கப்படுவதை உணர்ந்து,

மூடிய வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்து வாய் கொப்பளித்துக் கொண்டே கனவை Decode செய்ததில்,

எங்கோ கை-கால்கள் கட்டப்பட்டிருக்கிறேன்,
என்னைப் போலவே  எனை சுற்றியுள்ளோரும் அரை நிர்வாணம்,
மெதுவாய் ஊர்ந்து செல்கின்றோம்,
இரு பக்கமும் நாங்கள் அறியாத மொழியவர் எங்களை அரிவாள் முனையில் அழைத்துச் செல்கின்றனர்,

எனைச் சுற்றி நான் திரிந்த அந்த காடுகள் என் சுவாசத்தை முகர்ந்து எனக்கே அருள்வது போல எனக்கு காற்றை வீசியது. படர்ந்திருந்த புல்வெளி என் கால்களை தாங்குவதில் ஒரு பெருமை கொள்வதாய் என் பாதத்தை வருடியது. செல்லும் பாதையில் துணையாய் மேகமும், தூரத்து மரக்கிளையில் தவ்வி குதித்து பிடுங்கிய பழங்கள் என்னைப்பார்த்து ஒரு ஏளனச்சிரிப்பிடுகிறது. இடையிடையில் எதோ ஒருவகை வினோத கண்கள் கொண்டு என்னை இழுத்துச்செல்லும் அந்த மொழியறியாதவனை பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்.

கதவைத் தட்டிய அப்பா,
‘சீக்கிரம் வெளிய வாடா , கறிக்கடைக்கு போகனும்’ என்று குரலிட.
என் கனவு Decoding Session’ஐ  கொஞ்சம் தள்ளிப்போட்டு பிரியாணிக்கான பிரியத்தில் கிளம்பி எங்கள் ஏரியாவில் உள்ள இராமநாதபுரத்து பாய் கடைக்கு சென்றேன்.
ஐயா காலத்திலிருந்து பாயின் ஆட்டுக்கறி என்றால் தனிச்சுவை தான்.

பிரியாணி, உப்புக்கறி, குடல், தலைக்கறி, ஈரல், கொழுப்பு, இரத்தப்பொறியல் என்று ஆட்டின் எந்த ஒரு உறுப்பையும் சுவையாக்கி வெல்வதில் நாக்கிற்கு விடாத பயிற்சிக் கொடுத்தே வளர்ந்துள்ளேன்.

பாய், ஒரு கிலோ மார்கண்டம் குடுங்க என்று சொல்ல,
அவர் வெட்டித் தொங்கும் கறி ஸ்டாக் தீர, உடனே அவர் மகனுக்கு ஃபோன் செய்து இரண்டு ஆட்டைக்கொண்டு வரச்சொன்னார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில்,
இரண்டு ஆடுகள் ஒன்றின் மேல் ஒன்றாய்  கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கி வரப்பட்டது. எடுத்துக்கொண்டு கடைக்குள் சென்ற அவர் மகனும் அந்த கடையில் இருந்த இன்னொருவரும் ஆட்டை அறுக்க ஆயத்தமானார்கள்.

பாய், லேட் ஆகுது ஒரு கிலோ சீக்கிரம் குடுங்க என்று சொல்ல,
அங்கு கட்டப்பட்ட ஒரு ஆடு என்னை உற்று நோக்கியது. என் கண்கள் ஒரு கிலோ மார் கண்டத்திற்கு படும் அவசரத்தை உணர்ந்த அது என்னிடம் அதன் கண்கள் வழி,
‘இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கூடுதலாய் இந்த உலகில் வாழ விரும்புகிறேன், கொஞ்சம் பொறுமை காக்கலாமே’ என்பது போலான பார்வையது.

ஆனால்,
ஐந்து நிமிடம் வாய்க்காத அந்த ஆடு,
என்னைப் பார்த்த படி அந்த அரிவாளின் கீரலை சத்தமேதுமின்றி ஏற்கின்றது. அதன் சின்ன வால் துடிக்க துளி சத்தமின்றி தலையை ஒரு சட்டியின் மீது வைத்து இரத்தத்தை சிந்தாமல் பிடித்துக்கொண்டே தலை தனியாகி ஓரமாய் வைக்கப்பட்டது.

அதன் நெஞ்சு இன்னுமும் துடிக்கின்றது. அதன் ஒவ்வொரு காலை அரிவாளால் சீவி உடைத்து தனித் தனியே பிரித்தடுக்கினர். நான் கேட்ட ஒரு கிலோ மார்கண்டத்தை பீஸ் பீஸாக வெட்டி கருப்பு பிளாஸ்டிக் பையில் கொடுத்தார். காசைக்கொடுத்து விட்டு வீடு வந்து அமர்ந்து மீண்டும் Decode செய்ய முயற்சித்துக்கொண்டே இருந்தேன், சுத்தமாய் Sync ஆகாத என்னால் அதைத் தொடர முடியவில்லை.

மதிய உணவிற்கு வயிறு பெல் அடிக்க,
அம்மா சுடச்சுட பிரியாணி பரிமாறுகிறாள். எப்பவும் போல ‘இந்த பீஸ் வை, ஹான் அது, இது வை’ என்று பறக்க,

மிருதுவான அந்த கறியை பிரியாணி மணத்தோடு கண்கள் மூடி நாக்கிற்கு கொண்டு செல்லும் தருவாயில்,
அந்த ஆட்டின் கடைசி நொடிப் பார்வை கண்களுக்குள் வந்து போக,
அந்த கனவின் முடிவும், நோக்கமும் உணர்ந்தது.

இன்றைய பிரியாணியில்,
கறி சுவையாக இல்லை.


Thursday, 18 January 2018

பள்ளி மதிப்பெண்களும், சமூகத்தின் மீதான பார்வையும்...
















என்னடா தலைப்பே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறாப்புல இருக்குதா?

பாதி விஷயங்கள் அது போலத் தான் தோற்றம் அளிக்க கூடும். சற்று உள்ளார்ந்து சிந்திக்க நேர்ந்தால், முடிச்சுகள் போட இயலும்.

ஆம்,
ஒருவனது பள்ளி மதிப்பெண்கள், அவனுக்கு இந்த சமூகத்தின் மீதான ஒரு அக்கறையை விளக்கி காட்டி விடமுடியும் என்று கருதியே இந்த பதிவினை எழுத முயல்கிறேன். பெரிய ஆய்வு கட்டுரை எல்லாம் இல்லை. நேரம் இருந்தால் படிக்கலாம், இல்லையென்றால் வேறதாவது கிளு கிளுப்பான ஒன்றை வாசித்து நேரத்தை செலவலிக்கலாம். (பி.கு. லலிதா ஜுவல்லரி ஓனரின் தொணி எட்டிப்பார்த்தால் மன்னிக்கவும்)

சரி மேட்டர்க்கு வருவோம்,
ஒரு பதின்மூன்று வயது பிறந்த சமயத்திலிருந்தே உடலிலும் மனதிலும்
வேதியியல் மாற்றங்கள் ஏற்படும் வயது தொட்டவுடன்... அதுவரை என்பதுகளும் தொந்நூறுகளும் வாங்கியவர் கூட சற்று மதிப்பெண்களில் சரிய தொடங்கும் காலமாகவே மாறும்.

அந்த வயதில்,
காதல்னா என்ன? காமம் கெட்ட வார்த்தையோ? நம்ம’லாம் எப்படி பொறந்தோம்? அவன் ஏன் பொண்ணு மாறி எல்லாம் பண்றான் ? சுய இன்பம் தவறா? பெண் அடிமையா இல்லையா? கெட்ட வார்த்தைகள் பேசுவது தவறா? உண்மையாவே சாமி கண்ண குத்துமா? சமூக கட்டமைப்புனா ?, சாதினா என்ன? எது செய்ய பிடிக்கும்?  எது செய்ய முற்றிலும் அறுவறுக்கிறது? ஏன் கோவம் வருது?  நாத்திகவாதம் ? ஆன்மீகம் என்கிறார்களே அப்டீனா என்ன?

இது போன்ற பல கேள்விகள் உதிக்க தொடங்கும். இதையெல்லாம் புறந்தள்ளிட்டு படிடா... படிக்கலனா அப்பா சைக்கிள் வாங்கி தர மாட்டாங்கனு அம்மாவோட கெஞ்சல் சத்தம் காதில் ஒலித்தபடியே இருக்கும். அப்பா செய்யப்போற  அந்த ஊழலுக்கு மயங்கி விருப்பமில்லமா படிச்சு எதோ மாறி அந்த பதில் எழுதும் தாள்’ல வாந்தியெடுக்க வேண்டியிருந்துது. அப்படி எடுத்ததன் பயனா சைக்கிளும் கிடைக்காது, காரணம் வாங்குற மதிப்பெண் எதோ மதில் மேல் பூனை போல ஜஸ்ட் பாஸ் தான்.

அப்பாவோட திட்டு, அம்மாவோட கெஞ்சல் என்று படிக்கும் நேரத்தை தவிர்த்து... முதல்’ல தீர்த்துக்கொள்ளும் சந்தேகம் ஆனது பாலுணர்வு மீதான குழப்பங்கள் மட்டுமே.

மண்டையை குடையும் இந்த சமூகத்தை பற்றிய குழப்பங்களை தெளிந்துக்கொள்ள நேரமே ஒதுக்க முடியாமல் புத்தகங்களுக்குள் புதைந்து படிக்க ஆசை இல்லாமல் படித்து 60, 70 என மதிப்பெண்கள் வாங்கி எப்படியோ பள்ளி என்ற போரை ஆன்மீக அரசியல் வழி வென்று வெளியேறியாகிற்று.

வெளியேறிய பின்பு கல்லூரி என்கிற சூழல் சற்று சுதந்திரத்தை தருவதனால்.. அதை பயன்படுத்திக்கொண்டு... இந்த சமூகத்தின் மீது பார்வை செலுத்த நேர்கிறது... ஏதோ ஒரு வகை அரசியல் சித்தாந்தத்தின் மீது கவனம் செலுத்தி.. அதனுள் பயணிக்கவும் தொடர்கிறது.. சமூகத்தின் அவலங்களை கவனிக்க நேர்கிறது.... கலை, இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க நேர்கிறது... எதனிலாவது தேர முயற்சிகள்... முடியாவிடில் குறைந்த பட்சம் அதற்கான Audience’ஆகவாவது இருக்கின்றான்.

இந்த சமூக வலைதளங்கள் என்பது ஒரு வகையில் தங்களது கருத்துக்களையும், தனது அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவுர பதிவிடவும், ஏதோ ஒரு போராட்டத்திற்கான குரலாகவும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள உதவுவதாகவே இருக்கின்றது..

ஆனால் இதே பள்ளிச் சூழலில் தான் இன்னும் சிலர் 90, 100’லாம் வாங்குறான்.. அது எப்படி வாங்குறான்’னு அன்று ஒரு புரியாத புதிராகவே இருந்தது..
இன்று அவர்களில் சிலரை கவனிக்க நேர்ந்த போது பலரும் அவர்கள் சார்ந்த துறையில் உச்சத்தில் இருப்பவராக இருக்கின்றனர், அல்லது முற்றும் முழுதும் முகவரி அல்லாதவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் பலரும் மேலை நாடுகளில் கல்வியோ அல்லது பணியிலோ மிக தீவிரமாக செயல்படுகிறார்கள். நல்லதொரு விஷயம் தான். ஆனால், அதில் எவருக்காவது இந்த சமூகத்தினை சார்ந்த சிந்தனைக்கான ஒரு நொடியேனும் இருக்க பெறுமா? என்பது எனது கேள்வி.

இந்த சமூகத்தில் வளர்ந்த நீங்கள்,
இந்த சமூகத்தின் குறைந்த பட்சம் அதன் குரலாக ஏனும் இருப்பீர்களா?
இதை தவறென்றெல்லாம் சொல்லிவிட மாட்டேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்தின் மீதான பார்வை என்பது அவனது தனிமனித உரிமை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

மேலை நாடுகளில் வாழும் மெத்த படித்தவர்களை மட்டும் நான் சொல்லவில்லை... இங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கும் அதிக மதிப்பெண்கள் வாங்கிய தோழர்களில் பலரும் ஒரு Elite சமூகத்தின் பிரதிநிதிகளாகவே தங்களை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஒரு சுயநல போக்கையே கடை பிடிப்பவர்களாக இருப்பதை காண முடிகிறது.

அர்ஜெண்டினா என்றவுடன் அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபா முதலிய பல்வேறு நாடுகளின் விடுதலை வேட்கைக்கான விதையை தூவிய சே’வை நினைவில் கொள்ளும் மத்தியில் அதை புறந்தள்ளிவிட்டு எனக்கு அர்ஜெண்டினா என்றால் மெஸ்ஸி தான்’பா தெரியும் என்பதில் ஒரு Elite சமூகத்திற்கான பிரதிபலிப்பை பல Middle Class சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண்கள் வாங்கிய நண்பர்களிடம் காண கண்டேன்.

இந்த மதிப்பெண் சார்ந்த கல்வி இது போன்ற சமூகத்திற்கான பார்வையை புறந்தள்ளி சுயநல கல்வியையும், சுயநல முன்னேற்றத்தையும், பணத்தின் குவியலை மட்டுமே சார்ந்து, Elite சமூகத்திற்கான பிம்ப மாயைகளை பின்பற்றுமாயின்,
இந்த கல்வியை கேடுகெட்ட ஒன்றாகவே நினைக்கின்றேன்.

என்று இந்த சமூகத்தில்,
தான் வளர்த்துக்கொண்ட அறிவையும் அனுபவத்தையும், தன்னுடைய தனிமனித முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாமல்.. சமூகத்தின் முன்னேற்றத்திற்கும்.. அதன் அங்கமாக இருந்து... அதன் குரலாக Atleast செயல்படுவது என்பது ஒவ்வொரு இளைஞனிடையிலும் ஆழமாக பதிந்து.. அதை செயல்படுத்த எண்ணும் முனைப்பு இருக்கிறதோ, அன்றே இந்த சமூகம் முன்னேறிய ஒன்றாக இருக்க கூடும்.

எனவே,
சுமாராக மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளை எல்லாம் தன் பெற்றோர் உறுப்படாது என்று நினைக்க நேர்ந்தால்.. மன்னிக்கவும், அவர்களில் முக்கால் வாசி பேர் இந்த சமூகத்தின் குரலாகவாவது வாழ்ந்து அதில் பங்கெடுத்துக்கொள்ளும் ஒரு பொது நலனுடன் வாழ்பவராகவே இருக்கின்றார்கள்.

அதிக மதிப்பெண்கள் வாங்கி  தனக்கு பெருமை சேர்க்கின்றது உங்கள் குழந்தை என்று நீங்கள் சந்தோஷப்படுபவர்கள் ஆனால்... அதில் சிலர் சுயநல வாழ்க்கையை தொடர நேரும்... தூரத்தில் நின்று இந்த சமூகத்தை பார்த்து, இந்த சமூகத்தில் செயல்படாமலேயே... இந்த சமூகம் உறுப்படாது என்று குறை சொல்லும் அறிவார்ந்த மேதாவிகளாகவே வலம் வரக்கூடும் என்பது என் பார்வை.

(பி.கு. இரண்டு பிரிவிகளிலுமே Exceptions இருக்கும் என்பது இயற்கையின் நியதி. அதிக மதிப்பெண்ணும், சமூகத்தின் மீதான பார்வையுடையவராக இருக்குமாயின்...சிரம் தாழ்ந்த நன்றி.. மகிழ்ச்சி)

கடைசியாக,
மோகன்தாஸ் கரம்சந்த காந்தி என்றவன்.. தான் படித்த கல்வியை, தான் சேகரித்த அனுபவம் எல்லாம்... அவன் பிறந்த சமூகத்திற்கு அவசியப்படுகிறது என்பது புரிந்த அடுத்த நொடி இங்கே திரும்பி அவன்  அவனது இனத்திற்கானவனாக மாறி மகாத்மாவாக உயர்ந்தார்..

பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றவன் தான் கல்வியால் உயர்ந்த அடுத்த நொடி, அவனது இனத்திற்கான குரலாக மாறி.. அதன் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.. பாபா சாகேப் ஆக உயர்ந்தார்..

வாசித்தமைக்கு நன்றி

பிழையிருப்பின் திருத்தவும்...


ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...