Thursday, 18 January 2018

பள்ளி மதிப்பெண்களும், சமூகத்தின் மீதான பார்வையும்...
















என்னடா தலைப்பே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறாப்புல இருக்குதா?

பாதி விஷயங்கள் அது போலத் தான் தோற்றம் அளிக்க கூடும். சற்று உள்ளார்ந்து சிந்திக்க நேர்ந்தால், முடிச்சுகள் போட இயலும்.

ஆம்,
ஒருவனது பள்ளி மதிப்பெண்கள், அவனுக்கு இந்த சமூகத்தின் மீதான ஒரு அக்கறையை விளக்கி காட்டி விடமுடியும் என்று கருதியே இந்த பதிவினை எழுத முயல்கிறேன். பெரிய ஆய்வு கட்டுரை எல்லாம் இல்லை. நேரம் இருந்தால் படிக்கலாம், இல்லையென்றால் வேறதாவது கிளு கிளுப்பான ஒன்றை வாசித்து நேரத்தை செலவலிக்கலாம். (பி.கு. லலிதா ஜுவல்லரி ஓனரின் தொணி எட்டிப்பார்த்தால் மன்னிக்கவும்)

சரி மேட்டர்க்கு வருவோம்,
ஒரு பதின்மூன்று வயது பிறந்த சமயத்திலிருந்தே உடலிலும் மனதிலும்
வேதியியல் மாற்றங்கள் ஏற்படும் வயது தொட்டவுடன்... அதுவரை என்பதுகளும் தொந்நூறுகளும் வாங்கியவர் கூட சற்று மதிப்பெண்களில் சரிய தொடங்கும் காலமாகவே மாறும்.

அந்த வயதில்,
காதல்னா என்ன? காமம் கெட்ட வார்த்தையோ? நம்ம’லாம் எப்படி பொறந்தோம்? அவன் ஏன் பொண்ணு மாறி எல்லாம் பண்றான் ? சுய இன்பம் தவறா? பெண் அடிமையா இல்லையா? கெட்ட வார்த்தைகள் பேசுவது தவறா? உண்மையாவே சாமி கண்ண குத்துமா? சமூக கட்டமைப்புனா ?, சாதினா என்ன? எது செய்ய பிடிக்கும்?  எது செய்ய முற்றிலும் அறுவறுக்கிறது? ஏன் கோவம் வருது?  நாத்திகவாதம் ? ஆன்மீகம் என்கிறார்களே அப்டீனா என்ன?

இது போன்ற பல கேள்விகள் உதிக்க தொடங்கும். இதையெல்லாம் புறந்தள்ளிட்டு படிடா... படிக்கலனா அப்பா சைக்கிள் வாங்கி தர மாட்டாங்கனு அம்மாவோட கெஞ்சல் சத்தம் காதில் ஒலித்தபடியே இருக்கும். அப்பா செய்யப்போற  அந்த ஊழலுக்கு மயங்கி விருப்பமில்லமா படிச்சு எதோ மாறி அந்த பதில் எழுதும் தாள்’ல வாந்தியெடுக்க வேண்டியிருந்துது. அப்படி எடுத்ததன் பயனா சைக்கிளும் கிடைக்காது, காரணம் வாங்குற மதிப்பெண் எதோ மதில் மேல் பூனை போல ஜஸ்ட் பாஸ் தான்.

அப்பாவோட திட்டு, அம்மாவோட கெஞ்சல் என்று படிக்கும் நேரத்தை தவிர்த்து... முதல்’ல தீர்த்துக்கொள்ளும் சந்தேகம் ஆனது பாலுணர்வு மீதான குழப்பங்கள் மட்டுமே.

மண்டையை குடையும் இந்த சமூகத்தை பற்றிய குழப்பங்களை தெளிந்துக்கொள்ள நேரமே ஒதுக்க முடியாமல் புத்தகங்களுக்குள் புதைந்து படிக்க ஆசை இல்லாமல் படித்து 60, 70 என மதிப்பெண்கள் வாங்கி எப்படியோ பள்ளி என்ற போரை ஆன்மீக அரசியல் வழி வென்று வெளியேறியாகிற்று.

வெளியேறிய பின்பு கல்லூரி என்கிற சூழல் சற்று சுதந்திரத்தை தருவதனால்.. அதை பயன்படுத்திக்கொண்டு... இந்த சமூகத்தின் மீது பார்வை செலுத்த நேர்கிறது... ஏதோ ஒரு வகை அரசியல் சித்தாந்தத்தின் மீது கவனம் செலுத்தி.. அதனுள் பயணிக்கவும் தொடர்கிறது.. சமூகத்தின் அவலங்களை கவனிக்க நேர்கிறது.... கலை, இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க நேர்கிறது... எதனிலாவது தேர முயற்சிகள்... முடியாவிடில் குறைந்த பட்சம் அதற்கான Audience’ஆகவாவது இருக்கின்றான்.

இந்த சமூக வலைதளங்கள் என்பது ஒரு வகையில் தங்களது கருத்துக்களையும், தனது அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவுர பதிவிடவும், ஏதோ ஒரு போராட்டத்திற்கான குரலாகவும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள உதவுவதாகவே இருக்கின்றது..

ஆனால் இதே பள்ளிச் சூழலில் தான் இன்னும் சிலர் 90, 100’லாம் வாங்குறான்.. அது எப்படி வாங்குறான்’னு அன்று ஒரு புரியாத புதிராகவே இருந்தது..
இன்று அவர்களில் சிலரை கவனிக்க நேர்ந்த போது பலரும் அவர்கள் சார்ந்த துறையில் உச்சத்தில் இருப்பவராக இருக்கின்றனர், அல்லது முற்றும் முழுதும் முகவரி அல்லாதவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் பலரும் மேலை நாடுகளில் கல்வியோ அல்லது பணியிலோ மிக தீவிரமாக செயல்படுகிறார்கள். நல்லதொரு விஷயம் தான். ஆனால், அதில் எவருக்காவது இந்த சமூகத்தினை சார்ந்த சிந்தனைக்கான ஒரு நொடியேனும் இருக்க பெறுமா? என்பது எனது கேள்வி.

இந்த சமூகத்தில் வளர்ந்த நீங்கள்,
இந்த சமூகத்தின் குறைந்த பட்சம் அதன் குரலாக ஏனும் இருப்பீர்களா?
இதை தவறென்றெல்லாம் சொல்லிவிட மாட்டேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்தின் மீதான பார்வை என்பது அவனது தனிமனித உரிமை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

மேலை நாடுகளில் வாழும் மெத்த படித்தவர்களை மட்டும் நான் சொல்லவில்லை... இங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கும் அதிக மதிப்பெண்கள் வாங்கிய தோழர்களில் பலரும் ஒரு Elite சமூகத்தின் பிரதிநிதிகளாகவே தங்களை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஒரு சுயநல போக்கையே கடை பிடிப்பவர்களாக இருப்பதை காண முடிகிறது.

அர்ஜெண்டினா என்றவுடன் அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபா முதலிய பல்வேறு நாடுகளின் விடுதலை வேட்கைக்கான விதையை தூவிய சே’வை நினைவில் கொள்ளும் மத்தியில் அதை புறந்தள்ளிவிட்டு எனக்கு அர்ஜெண்டினா என்றால் மெஸ்ஸி தான்’பா தெரியும் என்பதில் ஒரு Elite சமூகத்திற்கான பிரதிபலிப்பை பல Middle Class சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண்கள் வாங்கிய நண்பர்களிடம் காண கண்டேன்.

இந்த மதிப்பெண் சார்ந்த கல்வி இது போன்ற சமூகத்திற்கான பார்வையை புறந்தள்ளி சுயநல கல்வியையும், சுயநல முன்னேற்றத்தையும், பணத்தின் குவியலை மட்டுமே சார்ந்து, Elite சமூகத்திற்கான பிம்ப மாயைகளை பின்பற்றுமாயின்,
இந்த கல்வியை கேடுகெட்ட ஒன்றாகவே நினைக்கின்றேன்.

என்று இந்த சமூகத்தில்,
தான் வளர்த்துக்கொண்ட அறிவையும் அனுபவத்தையும், தன்னுடைய தனிமனித முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாமல்.. சமூகத்தின் முன்னேற்றத்திற்கும்.. அதன் அங்கமாக இருந்து... அதன் குரலாக Atleast செயல்படுவது என்பது ஒவ்வொரு இளைஞனிடையிலும் ஆழமாக பதிந்து.. அதை செயல்படுத்த எண்ணும் முனைப்பு இருக்கிறதோ, அன்றே இந்த சமூகம் முன்னேறிய ஒன்றாக இருக்க கூடும்.

எனவே,
சுமாராக மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளை எல்லாம் தன் பெற்றோர் உறுப்படாது என்று நினைக்க நேர்ந்தால்.. மன்னிக்கவும், அவர்களில் முக்கால் வாசி பேர் இந்த சமூகத்தின் குரலாகவாவது வாழ்ந்து அதில் பங்கெடுத்துக்கொள்ளும் ஒரு பொது நலனுடன் வாழ்பவராகவே இருக்கின்றார்கள்.

அதிக மதிப்பெண்கள் வாங்கி  தனக்கு பெருமை சேர்க்கின்றது உங்கள் குழந்தை என்று நீங்கள் சந்தோஷப்படுபவர்கள் ஆனால்... அதில் சிலர் சுயநல வாழ்க்கையை தொடர நேரும்... தூரத்தில் நின்று இந்த சமூகத்தை பார்த்து, இந்த சமூகத்தில் செயல்படாமலேயே... இந்த சமூகம் உறுப்படாது என்று குறை சொல்லும் அறிவார்ந்த மேதாவிகளாகவே வலம் வரக்கூடும் என்பது என் பார்வை.

(பி.கு. இரண்டு பிரிவிகளிலுமே Exceptions இருக்கும் என்பது இயற்கையின் நியதி. அதிக மதிப்பெண்ணும், சமூகத்தின் மீதான பார்வையுடையவராக இருக்குமாயின்...சிரம் தாழ்ந்த நன்றி.. மகிழ்ச்சி)

கடைசியாக,
மோகன்தாஸ் கரம்சந்த காந்தி என்றவன்.. தான் படித்த கல்வியை, தான் சேகரித்த அனுபவம் எல்லாம்... அவன் பிறந்த சமூகத்திற்கு அவசியப்படுகிறது என்பது புரிந்த அடுத்த நொடி இங்கே திரும்பி அவன்  அவனது இனத்திற்கானவனாக மாறி மகாத்மாவாக உயர்ந்தார்..

பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றவன் தான் கல்வியால் உயர்ந்த அடுத்த நொடி, அவனது இனத்திற்கான குரலாக மாறி.. அதன் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.. பாபா சாகேப் ஆக உயர்ந்தார்..

வாசித்தமைக்கு நன்றி

பிழையிருப்பின் திருத்தவும்...


No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...