Sunday 26 March 2017

கடுகு - குற்றவுணர்வு.



















வணக்கம் தோழர்களே,

            விசாரணை என்ற திரைப்படத்திற்கு பின்னர் என் உறக்கத்தை கெடுத்த, சிந்திக்கச் செய்த ஒரு திரைப்படம்… விஜய் மில்டனின் *கடுகு*
எனவே, இந்த திரைப்படத்தின் கலை அம்சம், தொழில்நுட்பம், திரையாக்கம் என பேசுவதற்கு பல சினிமா வல்லுனர்கள் இங்கு வலம் வருகின்றனர். நான் ஒரு சராசரி மனிதனாக இந்த திரைப்படத்தை அணுக விரும்புகிறேன்.

ஆரம்பம் தொடங்கி இத்திரைப்படம் ஒரு மனிதனின் வாழ்க்கைப் போலவே நகர்ந்தது.. சராசரி மனிதனுக்கு என்னென்ன இன்னல்கள் இந்த உலகம் ஏற்படுத்தும் என்பதை இவ்வளவு அழகாக எவரும் விளக்கிவிட முடியாது என்றே தோன்றுகிறது..

*ஒரு கலை அழிகின்றதென்று தெரியும்பொழுதே, அந்த கலைஞனும் இறந்துவிடவேண்டும்*

*Blue film-ல நடிக்க கையெழுத்து போடுற பொண்ண Sunny வாழ்கனு சொல்லுவோம்,
வயித்து பொழப்புக்கு என்ன செய்யுறதுன்னே தெரியாம உடம்ப வித்தா தெவிடியாளுனு ஏசுவோம்*

*தப்பு செய்யறவங்கள விட தப்பு செய்யும்போது அத பார்த்துட்டு பேசாம போற உன்ன மாறி நல்லவங்கதான் ரொம்ப மோசமானவங்க

இது போன்ற வசனங்களெல்லாம் உலுக்கிவிடுகிறது..

புலியாட்டம் எனும் கலை… நிச்சயமாக என் மகன் பிறக்கும் காலத்தில் இருக்காது… அதை புத்தகத்தில் கூட வைத்திருக்கமாட்டோம்…
காரணம் கலைகளிலும் நாம் சாதிய ஆதிக்கங்களை செலுத்தி… கலைகளிலும் ஒரு வர்ணாசிரம ஏற்றத்தாழ்வினை உருவாக்கியுள்ளோம்..

நடனமென்றால் பரதம்…பாடலென்றால் கர்நாடக சங்கீதம் என்று.. அதிலும் வேற்றுமை..

என் மகனுக்கு நான் வயலின் இசையை இரசிக்க சொல்லிக்கொடுப்பேன்.. ஆனால் பறையிசையை பயிலவைக்க முயற்சியெடுப்பேன்… காரணம், , இந்த உலகில் ஏதேனும் புரட்சி உண்டாகவேண்டுமென்றால்.. கலையெனும் ஒரே ஒரு வழி தான் உண்டு… அந்த கலையின் வழி சாதியத்தை வென்றெடுப்போம்..

இதுபோல தான் புலியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கிராமிய இசை, சாமியாட்டம், ஒப்பாரி என எத்தனை கலைகள் அழியும் நிலையில் உள்ளது…

இத்தகைய தருணத்தில் அந்த புலியாட்டத்தின் சில நுணுக்கங்களை அத்துனை அழகாக எடுத்துரைத்து.. புலியாட்டம் ஆடுபவனின் பலம்… புலி போல் வேடம் மட்டும் பூணுவதில்லை, அவன் அந்த வேடம் பூண்டவுடன், அவனுள் ஊறிய அந்த புலியின் குணாதிசயங்கள் அவனை எத்துனை பலம் கொண்டவனாக மாற்றி எதிரியை வீழ்த்துகிறது என மிகவும் வீரியமாக எடுத்துக்காட்டிய விதம்.. சொல்லிக்கொண்டே போகலாம்…

மொத்தத்தில் இந்த திரைப்படம், இந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தோலுரித்திருக்கிறது..

என்னை ஏன் இந்த சினிமா உறங்கவிடவில்லை என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்வுகள் தான் காரணம்,

முதல் நிகழ்வு

பேருந்தில் பயணிக்கிறேன்..
பெண்ணொருத்தி நிற்கிறாள்..
பேடி ஒருவன் அவள் பின் உரசுகிறான்..
அவள் ஒதுங்குகிறாள்…
மீண்டும் உரசுகிறான்…
அவனை கேள்வி கேட்கவில்லை… மனதுக்குள் நான் அவனை திட்டித்தீர்க்கிறேன்…
ஆவடிக்கு டிக்கெட் எடுத்தவள், வாவின் ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிவிட்டாள்..
நான் ஏதும் செய்யவில்லை… மனதில் திட்டிக்கொண்டதோடு சரி…
ஒருவேளை நான் அன்று எழுந்து அந்த பெண்ணிற்கு என் இருக்கையை வழங்கியிருந்தால்… அவள் அந்த தொல்லையிலிருந்தும் தப்பியிருப்பாள், ஒரு பாதுகாப்பான சூழலையும் உணர்ந்திருப்பாள்.. ஆனால் நான் அதை செய்யவில்லை…
அன்று இரவு அவள் எப்படி உறங்கியிருப்பாள்??
ஒருவேளை நாளை அவள் அண்ணன், அப்பா என்று அவர்களின் தொடுதலைக்கூட ஒரு பாதுகாப்பற்ற தொடுதல் போல அவள் உணர நேர்ந்திருந்தால்??
நிச்சயம்.. அந்த நிகழ்வின் போது உரசிய அந்த ஆண் மட்டும் கெட்டவன் அல்ல, அவன் அந்த அவச்செயல் செய்தபோது… அப்பொழுது ஏதும் செய்யாமல் அந்த பெண்ணிற்கு நடந்த அநியாயத்திற்கு துணை சென்ற நானும் அவனை விட மோசமான ஒரு உயிரினம் ஆகிப்போனேன்..


இரண்டாவது நிகழ்வு…

ஒரு நாள் என் நெருங்கிய தோழி.. அவள் தந்தை வெளிநாட்டில் இருந்து ஒரு Branded Jeans வாங்கி அனுப்பி வைத்திருந்திருக்கிறார்… இவள் அதிகம் jeans அணியாதவள்… அன்று ஏதோ மிகுந்த ஆசையுடன் எந்த Jeans-ஐ அணிந்துக்கொண்டு ஒரு வேலையாக சென்றிருக்கிறாள்…

தெருவின் ஓரம் நடந்து சென்றிருக்கிறாள்… இரண்டு ஆண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக பின்னே வந்து அவள் பின்னே தட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்… அது மட்டுமின்றி.. அவளை சில வசைச்சொற்கள் சொல்லி நகைத்துவிட்டு சென்றனர்..


அங்கேயே அழுது சில நிமிடங்கள் நின்றிருக்கிறாள் என் தோழி..
ஒரு பத்து நொடிகள் அவளைப் பார்த்த அந்த பொதுஜனம், அடுத்த வினாடி அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனராம்… ஒருவரும் அவள் அருகில் வரவில்லை… அவள் செல்ல வேண்டிய காரணத்தை தவிர்த்துவிட்டு அழுதுக்கொண்டே வீடு திரும்பியவள்… யாரிடமும் இரண்டு நாட்கள் பேசவில்லை…

எனக்கு சில நாட்களுக்கு பிறகு தொலைப்பேசியில் அழைத்தாள்… அவள் பேச்சில் ஏதோ ஒரு வித்தியாசம் தென்பட்டதால்… நான் கொடைய.. அவளும் இவையனைத்தையும் அழுதுக்கொண்டே கொட்டித் தீர்த்தாள்..

ஆறுதல் கூரிய நான்… கடைசியாக அறிவுரை என்ற பேரில்.. ஒரு அசிங்கமும் செய்தேன்… இனி இந்த Jeans அணியாதே என்று அறிவுரை கூறினேன்..
அத்தனை நேரம் அழுத அவள்…
சத்தமாக சிரித்தாள்.. சிரித்துவிட்டு… எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான்’ல என்றாள்..

பதில் அறியாது கூணிக்குறுகினேன்…
அன்று எனக்கு முதிர்ச்சியில்லை…பக்குவமில்லை… புரிதல் இல்லை…
இந்த திரைப்படத்தின் தாக்கத்திலிருந்து நான் இன்னும் மீளவுமில்லை…

இனி நான் என் கண்முன் நடக்கும் அநியாயத்திற்கு ஒரு துளி எதிர்வினையாகவாவது அமைந்திடுவேன் என்னும் உறுதியை இந்த சினிமா எனக்கும் ஏற்படுத்தியுள்ளது..

விமர்சிக்கவெல்லாம் எனக்குத்தெரியாது..

எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியதற்கு விஜய் மில்டனுக்கு நன்றி..


கடுகு- குற்றவுணர்வு.



1 comment:

  1. ஸ்மால்
    கடுகு சிறுத்தாலும் ...

    ReplyDelete

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...