Saturday, 7 March 2015

எனக்கும் ஒரு மகள் பிறப்பாள்…



உலக உயிர்களுக்கெலாம் உயிர் தரும்
உன்னத பெண்மை அனைவரிலும் உண்டு
அப்பெண்மையை அதிகமாய் உண்டு
அதனுடன் அழகுடலும் கொண்டு
அமைதிக்கும் ஆக்கிரோ‌ஷத்திற்கும் இடையில்
அன்போடு பயணிக்கும் உயிர் ஒன்றென்றால்
அன்புறும் பெண்மை தான்…

தொப்புள் கொடி கொண்டு அவளுடன்
தொற்றியிருந்த என் உடலை அறுக்கச்சொல்லி
அவள் மார்போடு அணைத்து கொண்டவள் என் அன்னை..

மண்டையில் ஏதும் ஏறாதபோதும்
உன்னால் முடியுமென தட்டி கொடுத்து
தளர விடாமல் தடுத்தவள் என் தோழி….

ஒரு பாதி உடலாக உயிரோடு கலந்தவள்
கனவுகளிலும் காதோரம் கதை சொல்பவள்
யாரும் சீண்டாத எனையும் அழகனென அழைப்பவள்
உடனிருந்து உயிருக்கே உயிர் சேர்ப்பவள்
எனை ஆள்பவள் அவள் தான் என்னவள்…

எனை ஆள்பவள் உடல் வழி
என் காதலால்
எனில் வாழ்பவள் வருவாள்- அடடா
எனக்கும் ஒரு மகள் பிறப்பாள்…

Monday, 2 March 2015

எது ஆன்மீகம் ??



இறை என்ற இயற்கையையுணர
திசைதோறும் நீ தேடாவிடில்
இருப்பதும் இல்லாமல் போகும்
இல்லாததும் இருப்பதாய் தோன்றும்

திரை விலக்கி தீபம் காட்ட
அனைவரும் கண் பிளக்க
அடடா!! இறைவன் என்போர்
இமை விரித்து இறைவன் இவன் தான்
எனும் குருட்டு நம்பிக்கை கூடாதென்பேன்

தேடல் இல்லையெனில்
தாகம் இல்லையெனில்
இப்பிறப்பினை உணர்ந்திட
தேகம் இருந்தும் பயனில்லை

பகுத்தறிவில் இறைவனை கண்டால்
அவனே இறைவன் என்பேன்
அகமிருந்து அன்பு செய்தால்
அதுவென்பதே ஆன்மீகம் என்பேன்…. 



ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...