Sunday, 31 December 2017

திரைத் தலைவனின் ஆன்மீக அரசியல்..

















ஒரு வயது தொடங்கி இன்று வரையில் இந்த ரஜினி என்கிற ஒரு திரை பிம்பத்தை காணும்பொழுதெல்லாம் ஓர் இனம் புரியாத ஒரு பூரிப்பு ஏற்படும். அந்த பூரிப்பு மிகவும் தூய்மையானதாகும்.
காரணம்,
குழந்தையின் ஒரு Innocence போன்று அதுவும் காரணமற்ற பேரானந்தத்தின் ஒரு தொடக்கப் புள்ளி.

சாகும் முன்னர் அவர் அருகில் நின்று அந்த அசாத்திய மனிதனின் அசாத்திய Energy’ஐ கொஞ்சம் திருடிக்கொள்ள வேண்டும் என்ற பேராசைகள் கூட பட்டதுண்டு.

அப்படி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக விளங்குகின்ற பிம்பம் தான்
ரஜினிகாந்த்.

பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரனாக ஓடி வந்து பூசணிக்காயை தலையால் உடைத்த பொழுது *வாவ்* என்று வாயை திறக்கும்பொழுது அம்மா என் வாய்க்குள் இறங்காத காய்கறிகளை திணித்திடுவாள்.

முத்து படத்தில் தோளில் துண்டை மாற்றி மாற்றிப் போட்டு ரஜினியின் வசனங்களை மனப்பாடம் செய்து பேசிக்காட்டி பல முத்தங்கள் பெற்றதுண்டு.

படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனிடம் பேசுவதற்கு முன் ஒரு நடை நடப்பார்..அந்த நடை பழகுவதற்காக ஆயிரம் முறை சி.டியை தேய்த்ததுண்டு.. ஊஞ்சல் சீன் பார்க்கும்பொழுதெல்லாம் குதித்ததுண்டு.

கெட்ட பையன் சார் இந்த காளி என்ற பொழுது தலைவா என்று கூவியதுண்டு.

ஆம் தலைவன் தான்.
அந்த இருட்டு கூடாரத்தில் ஆயிரம் பேர் நடுவே,
அத்தனை பேரின் உள்ளத்தையும் கையகப்படுத்திக்கொள்ளும் அந்த ஆளுமை அந்த ஒரு மனிதனை தவிர இங்கு எவருக்கும் இல்லை என்பது மறுக்க முடியாத ஒன்று.

எத்தனை ஆயிரம் நடிகர்கள் வந்து போனாலும் இந்த ரஜினிகாந்த் எனும் ஆளுமையின் அருகில் கூட நெருங்கிவிட முடியாது. அது ஒருவகை சக்தி.
ஒரு அசாத்திய Super power.

ஆனால்,

அரசியல் என்று வரும்பொழுது..
இந்த இருட்டு கூடாரத்தையும் தாண்டிய ஒரு வெளிச்சமும் இருளும் மாறி மாறி வரக்கூடிய ஒரு உலகத்தை உடையது. இதில் ஆளுமை என்பதற்கு எவ்வகை அரசியல் அவசியம்?

அரசியல் என்பது என்ன?
தமிழகம் எவ்வகை மக்களின் ஒருங்கிணைந்த மாநிலம் ? தமிழகத்தின் வரலாறு என்ன? தமிழகம் கடந்து வந்த அரசியல் கொள்கைகள் என்ன?
அரசியலில் ஆயிரம் தத்துவ நிலைப்பாடுகள் உண்டு... அதில் எவ்வகை நிலைப்பாடு தமிழ்நாட்டிற்கு உரிய ஒன்றாக இருக்கும்?

அடிப்படை அமைப்பு மாற்றம் எப்படியாக இருக்கும்?
இந்தியா எனும் தேசத்திற்குள் இருந்தாலும் எந்தெந்த கொள்கைகளில் தமிழகம் தனித்து இருக்க விரும்புகிறது? ஏன் இந்தியை இங்கு திணிக்க முடியவில்லை?

சாதி மதங்கள் எப்படி இன்னுமும் ஒளிந்திருந்து அதற்கான தீணியை மறைமுகமாக பெறுகிறது. இதனை ஒழிப்பதற்கான வழி எவ்வாறாக இருக்கும்?

தமிழகத்தின் விவசாய கொள்கை, மீனவர்களின் துயரம், ஈழ அரசியலின் மீது தமிழகத்திற்கான நிலைப்பாடு, காவிரி நீர் பங்கீடுக்கான தீர்வு என ஆயிரம் அரசியல் நிகழ்கால பிரச்சனைகள் என ஏகப்பட்ட கேள்விகள் எழ தொடங்குகிறது.

இத்தனை வருடங்களின் எதிர்ப்பார்ப்பிற்கு பிறகு ரஜினி இந்த முடிவை எடுக்கிறார் என்றால்,
ரஜினி இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்க்கமான செயற்பாட்டு வரைவுடன் வருவாரேயானால் அதை விடவும் மகிழ்ச்சி இந்த ரசிகனுக்கு வேறு இருக்காது.

ஆனால் ஒரு நிருபர்,
அவரிடம் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்ட பொழுது,
எனக்கு தலையே சுத்திடுச்சுனு சொல்லும்பொழுது, சற்று நெருடலாகவே இருந்தது என்பது தவிர்க்கமுடியாததாகிறது.

அறுபெத்தெட்டு வயதில் என்ன அரசியல் என்று கேட்பவர்களுக்கு,
காந்தி, பெரியார், காமராஜர் அரசியலில் வீரியம் நிறைந்து காணப்பட்டது இந்த 60’களில் தான் என்பது உரத்த உண்மை.

பழுத்த தெளிவு இருக்கும் வயது இது.. அரசியலுக்கு அறிவும், தெளிவும், அனுபவமும் மிக அவசியம். அது ரஜினிகாந்திடம் இருப்பதாகவே உணர்கிறேன்.

ரஜினியின் அரசியலில் அச்சம் ஏற்படுத்தும் மிக முக்கியமான குறியீடுகளில் முதன்மை எது என்றால்,

பொத்து பொத்தென்று அவர் தடுக்கும்பொழுதும் காலில் விழும் அவரது பக்தர்கள் தான்..
அந்த அடிமையாக விரும்பும் மனோபாவம் என்பது நல்ல தலைவனைக்கூட எங்கேனும் தவறிழைக்க நிச்சயம் வழி வகுக்கும்.

சுயமரியாதை தத்துவத்தை முன்னெடுத்து முன்னேறிய முதல் மாநிலத்தில் தான் காலில் விழுந்து, பிறகு காலையும் வாறி, உண்மையை புதைத்த கேவலத்திற்குரிய அரசியல் நடைபெறுகிறது.

அப்படிப்பட்ட தருணத்திற்கான மாற்றமாக தன்னை ரஜினிகாந்த் நிலை நிறுத்திக்கொள்ள முற்படும்பொழுது அவர் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை எவை என்பதற்கான தெளிவு மிகவும் அவசியம் ஆகிறது.
காரணம்,
இந்த தனிமனித துதிப்பாடல் அரசியலுக்கான Demerits இதுதான். தகுந்த Successor இல்லாமல் தவிப்பது. அந்த நிலையில் தான் திமுக’வும், அதிமுக’வும் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

என்னதான் ரஜினி SuperHuman’ஆக இருந்தாலும் இயற்கை மனிதனுக்கு இந்த பூமியில் தவழ சில காலங்கள் தான் அருளியுள்ளது. எனவே தெளிவான அரசியல் தொடர்ச்சிக்கான வியூகமும் அவசியம்.

அரசியல் கட்சியின் கட்டமைப்பு என்பது தஞ்சை பெரிய கோவில், அங்கோர் வாட், தாஜ்மஹால், கேத்தோலிக் சர்ச்’களின் கட்டமைப்புக்கு தேவைப்படும் அறிவியலை விடவும் நுட்பமானது. 
அதற்கான அவர் திட்டங்கள் என்ன என்பதையும் கவனிக்க நேர்கிறது.

இத்தனைக்கும் பதில் கிடைக்கும் வரை
ரஜினிகாந்த், நீர் எனக்கு திரையில் மட்டுமே தலைவன்.

ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கம்பு சுற்றினால்,
அதே ஜனநாயக நாட்டில் என்னை ஆள நினைக்கும் ஆளுமைக்கான தகுதியை விமர்சிக்க எமக்கும் சம உரிமை உண்டு என்பது மறுக்க இயலாத வாதம் ஆகிறது அல்லவா?

நான் நேசிக்கும் திரை அசாத்திய சக்தியே,
அரசியலில் நீர் நல்லது செய்ய வாழ்த்துக்கள்...
வாசகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி..

Sunday, 17 December 2017

அருவிக்கு ஒரு கடிதம்



















சினிமா மொழி இலக்கணம் எல்லாம் நான் அறியாதவன்..சினிமா கையாள வேண்டிய உக்திகளோ, நம்பகத்தன்மையோ என்று இவைகள் எல்லாம் பேச ஆயிரம் வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் ஆயிரம் என்ன? இலட்சம் குறைகள் கூட சொல்லலாம்.

ஆனால், அருவி... உன்னை கடந்து செல்ல விடாமல் மனம் என்னை தடுத்து உன் நினைவுகளில் உழன்று பிரள சொல்கிறது ஏனென்று அறியாமல் அலைகின்றேன்.

அருவிக்கு ஒரு கடிதம்,

நீ சிரிக்க வைத்தாய், காதலில் விழ வைத்தாய், ஏங்க வைத்தாய், பைத்தியம் ஆக்கினாய், அழுக வைத்தாய், கடைசியாக பிரிந்தும் சென்றாய்.

நீ கற்பனை தான் என அறிவேன்..

ஆனால் எங்கேனும் உன்னை பார்க்க விரும்புகிறேன்..பார்த்தால் இருக அணைத்துக்கொள்வேன்.. தந்தையின் உடல் வாசத்தை உனக்கு தர முயல்வேன்... கால்களை கண்ணீரால் நனைப்பேன்...

ஏன் உன்னை இத்தனை விரும்புகிறேன்?

*ஒடம்பெல்லாம் வலிக்குது.. தாங்க முடியாத வலி..ஆனா இந்த ஒலகத்துல வாழனும்னு ஆசையா இருக்கு.. அதனால வலிய தாங்கிக்கிறேன்*

உன்னை நான் தீவிரமாய் காதல் செய்ய,
நீ சொன்ன இந்த ஒரு வசனம் போதுமானது.

மெல்லிய பூக்களுக்குள்- நீ
ஒளிந்திருந்த பூகம்பம்,
சிகரெட்டு புகையினுள்- நீ
மறைத்து வைத்த மலர் வாசம்,

சின்ன சிரிப்புக்குள்- ஓர்
தத்துவ போதனை
அழகான உன் கண்களுக்குள்
அத்தனையும் வேதனை

உன்னை தேவிடியா என்றவர்களையெல்லாம் நீ தேவதை என சொல்லவைத்து வெற்றியும் கண்டு விட்டாய்.

உனை விடவும் பேரழகி இங்கு எவளும் இல்லையடி, அருவி.

ஐ லவ் யு அருவி.

மகளாக பிறப்பாயோ? வேண்டுகிறேன் இயற்கையை.



ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...