At the Age of 5-10,
தெய்வ வழிபாட்டின் மீதும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த நான் அந்த வயதில் ஒரு ராம.நாராயணன் படத்தையும் விட்டு வைத்ததே இல்லை. பக்த பிரகலாதா படத்தை ஓராயிரம் முறையேனும் பார்த்து சீ.டி'க்களை தேய்த்திருப்பேன். அத்தனை தீவிரமான கடவுள் பக்தன்.
ஆன்மீகத்தில் அடுத்த படிக்கு முன்னேறிய நான்,
கோவில்களின் வெளியே இருக்கும் கடைகளில் கடவுளர்களின் Miniature Metal சிலைகளை வாங்கி வந்து வீட்டில் சந்தனம் கரைத்து பூசைகள் செய்தெல்லாம் வந்திருக்கிறேன்.
பொம்ம கார், பைக்குகளையெல்லாம் விடவும் இந்த கடவுளர்க்கு செய்யும் சந்தனம், குங்குமம், விபூதி அபிஷேகமெல்லாம் இன்னும் மகிழ்ச்சியுறுவதாக இருக்கப்போக, என் அம்மாவோ ஒரு தெய்வாதீனமான மகனை பெற்று விட்டோம் என்ற அதே மகிழ்ச்சியில் என் அப்பாவிடம் இந்த கூத்தையெல்லாம் சொல்ல அப்பா சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அவனை அவன் போக்கிற்கு விடு என்றார்.
ஆனால்,
இரண்டொரு வாரத்திற்கும் மேலாக இதனை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் என்னை மடைமாற்றுவதற்கு நான் கடவுளர் சிலைகளை வைக்கும் அந்த டப்பாவின் மேலே பெரியார் என்ற ஒரு புத்தகம் வைத்திருந்தார்.
மறுநாள் அந்த புத்தகத்தை எடுத்து அந்த வெண்தாடி கிழவன் முகத்தை மட்டுமே ஒரு ஐந்து நிமிடம் விழி அசையாது பார்த்து கொண்டிருக்கிறேன்,
அந்த கண்களில் இந்த ஒடுக்கப்பட்ட மானுடத்தின் மீதான பேரன்பின் அருவியாய் அன்பும், உரிமைக்கதிரான முழக்கமும் வழிவதை உணர்ந்து அப்பாவிடம் முதல் முறையாய் கேட்டேன்,
அப்பா, யாரு இந்த பெரியார் தாத்தா?
அப்பா:- யாரு காந்தி தாத்தா?
இந்திய தேசத்தின் தந்தை.
அப்பா:- பெரியார் தமிழர் தந்தை.
நான் ஓவென்று வாய் பிளப்பதற்குள் சரி, அந்த கடவுளர் சிலையெல்லாம் சாமி அறையில வச்சிட்டு போயி படி என்று அப்பா சொல்ல,
இப்படித்தான் தொடங்கியது எனக்கு பெரியாருடனான அறிமுகம்.
பூஜை புனஸ்காரங்களெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த மானுட முன்னேற்றத்திற்காக, மானுட சமத்துவத்திற்காக, மேம்பாட்டிற்காக உன் அறிவாயுதம் கொண்டு சிந்தித்து அனைத்து விதமான சமூக அநீதிகளுக்கும் எதிராய் போராடு என்று சொன்ன மாபெரும் தலைவனை எனக்கு அறிமுகப்படுத்திய என் தந்தைக்கும், நம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக மூத்திரைப்பை ஏந்தி முதுகிழத்திலும் போராடிய தந்தை பெரியாருக்கும் கோடி நன்றிகள்.
இன்று வரையிலும், கடவுள் மறுப்பென்ற ஒரு புள்ளியில் மட்டும் அவரை அனுகுவதை தாண்டி அவர் இந்த மானுட சமூகத்துக்கென முன்னெடுத்த அத்தனை போராட்டங்களையும் நாம் பயில வேண்டிய தேவை இன்றைய சூழலில் மிகவும் அவசியமாக உள்ளது.
சமூக நீதி, சமதர்மம், சமத்துவம், பெண்ணிய விடுதலை என்று இவை அனைத்திலும் இன்றும் அவர் பயணித்த எல்லா பாதைகளின் மீதும் நாம் நடக்க வேண்டிய தேவை இருப்பதாகவே உணர்கிறேன்.
வாழ்க பெரியார்🖤❤️🖤
ஓவியம்: ஓவியர் Trotsky மருது.