எழுந்து
வா எழுந்து வா என
எத்தனை
குரல்கள்
கவிழ்ந்து
போ கவிழ்ந்து போ
என
எத்தனை குரல்கள்
எழுதவே
விரும்பாத
இரங்கற்பா
கவிதையை
எழுத
வைக்கிறது
இயற்கையின்
சதி வலையே
துயரெல்லாம்
சொல்லாக
அரசியலை
நடையாக
உன்னை
தமிழாக கொண்டு
எழுதுகிறேன்
கலைஞரே
மரணம்
தான் நிரந்தர
ஓய்வென்று
நம்பியிருந்தேன்
இல்லையென
நிரூபித்த
ஓய்வறியா
சூரியனே
உயிர்
போராடி மாய்ந்ததென
உள்ளம்
மகிழ்ந்த எதிரிகளை
மயிர்
அளவும் மதியாது
உடல்
கொண்டு வென்றாயே
தமிழ்த்தாயின்
கண் கண்டேன்
ஓரமாய்
துளி கண்ணீர்
கடைக்குட்டி
கண்கள் மூடி
உறங்குவதை
கண்டு
திராவிடத்தின்
குரலாக
உடன்பிறப்பை
விதைத்திட்டு
சமத்துவமும்
சமூக நீதியும்
முழுமூச்சாய்
கொண்டவனே
மூச்சு
நின்ற பின்னும்
முயன்று
வென்றாயே
எவனுக்கு
அமையுமையா
இத்தகைய
வாழ்க்கையும் ?
இத்தகைய
மரணமும்?
மஞ்சள்
துண்டும்,
கருப்பு
கண்ணாடியும்,
சொகுசு
நகரும் நாற்காலியும்,
தடித்த
மைப்பேனாவும்
எம்மோடு
சேர்ந்தே அழுவதை
கேட்கிறேன்
உயிர்
கொண்டு போராடி
வென்ற
கதை உண்டு
மரித்த
உடல் கொண்டு போராடி
வென்ற
எவன் உண்டு சொல்லும்?
தந்தை பெரியாரின்
குரல் தேடி
தாய் அண்ணாவின்
மடி தேடி
சமத்துவ அரசியல் கதைக்க
சென்றாயா தமிழ் மகனே?
கலைஞரே,
நான்
கலங்கேன்
நீ
செய்ததெல்லாம்
நான்
உணர்கிறேன்
கலைஞரே
நான்
கலங்கேன்
வாழ்க
தமிழ்,
வாழ்க
கலைஞர்,
தமிழ்
வெல்லும்.
பழ.கார்த்திக்
சம்பந்தன்
08/08/2018