Saturday, 24 January 2015

ஐயா..



அழுதுகொண்டிருக்கும் அப்பத்தாவிற்கு
ஆறுதல் சொல்ல
அருகில் சென்றேன்

பிணமான என் ஐயா
பேச வேண்டி எனை அழைத்தான்
கட்டப்பட்ட வாய் திறந்து
காதோரம் கதை சொன்னான்..

நாளை உயிர் பிரியுமென
நன்கு தெரியுமடா
எமன் என்னை இழுக்கையிலே
பொறு வருகிறேன் என்றேன்டா
  
எழுபது வயதிலும்
என்னவள் அழகியடா
அழுகையிலும் அழகி தான்
அழுகட்டும் விட்டுவிடு

  
பொட்டு வைத்த அவள்
முகத்தை சில மணித்துளிகள் ரசிக்கவிடு
சடங்கென்ற பெயரிலே அவள்
திலகம் நீக்கிடுவர்

உடல் கருகி சாம்பலான
பின்னர்- என் சாம்பலை
நெற்றியில் பூசிக்கொள்ளுங்கள்
என் சாம்பலாவது கடைசி முத்தமிடட்டும்
உங்களுக்கு..

இரு சொட்டு கண்ணீர் வந்து
எட்டிப்பார்க்கும் எனக்கேனோ
இன்று மட்டும் என் ஐயா
அழகாக தெரிகின்றான்

’’வருகிறேன்” என சிரித்தான்
போய் வாரும்  என நான் சிரித்தேன்
சிரித்தபடி தூங்குகின்றான்
சத்தமின்றி சாய்ந்துக்கொண்டே….

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...